கடந்த வாரம் வரை நான் நியாம்கிரிக்கு சென்றதில்லை. சக்தி வாய்ந்த பன்னாட்டு நிறுவனமான வேதாந்தா அப்பகுதியில் சுரங்கம் தோண்ட முனைந்தது தொடர்பாக டோங்கிரியா கோந்த் பழங்குடியினருடன் மோதல் மூண்டுள்ளது. பிறகு ஏன் நான் ‘நியாம்கிரியை மறுபரிசீலித்தல்‘ என தலைப்பிட்டேன்? அப்பகுதி குறித்து ஏற்கனவே படித்துள்ளேன். நண்பர்கள் வாயிலாக கொஞ்சம் தெரிந்து வைத்துள்ளேன். இதனாலேயே எனக்கு அங்கு முன்பு சென்று வந்தது போன்ற உணர்வு உண்டு. உலக ஊடகங்கள் இப்போராட்டத்தை டேவிட் - கோலியாத் மோதலுடன் ஒப்பிடுகிறது. மக்களின் போராட்டத்தால் அந்நிறுவனம் முற்றிலுமாக திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. இதுதான் மக்களின் சக்தி. போராட்ட கதையின் சுருக்கம் எளிமையாக தோன்றலாம். உண்மையில் கடந்த வாரம் நான் நியாம்கிரி சென்றதன் நோக்கம் சுரங்க எதிர்ப்பு போராட்ட கதைகளை தாண்டி, அவற்றை மறுஆய்வு செய்வதற்கும் தான். இப்படி தலைப்பு வைக்க இது இரண்டாவது காரணம்.
ஒடிசாவின் தென்மேற்கில் வாழும் டோங்கிரியா கோந்துகள் இந்தியாவின் “மிகவும் பாதிக்கப்படக் கூடிய பழங்குடி குழுக்களில்” ஒன்று. அவர்களிடம் உள்ள உலக பார்வை, பண்பாடு, அறிவு, இயற்கையுடனான உறவு போன்றவை இன்று ”நாகரிகமானவர்கள்” என்று சொல்லிக் கொள்பவர்களிடம் கூட இருப்பதில்லை. அவர்கள், இந்திய அரசும், நகர்ப்புறத்தின் படித்தவர்களும் தங்களை “பின்தங்கியவர்கள்“ என்று அழைப்பதாக சொல்கின்றனர். கல்லாமை, எளிமையான தொழில்நுட்பம், மாற்று விவசாயம், ஆன்மிகம், போதிய பள்ளிகள், மருத்துவமனைகள் இல்லாமை, தங்கள் கிராமங்களுக்கான கச்சா பாதைகள், மின்சாரம் இல்லாமை இன்னும் பல. தற்போது அனைத்து அதிகாரங்களையும் கொண்ட ஒரு தனியார் நிறுவனத்தை அவர்கள் வென்றுள்ளனர். (அப்பகுதியில் சுரங்கம் தோண்ட மறுக்கப்பட்டதை மறுபரிசீலனை செய்யுமாறு வேதாந்தா முயற்சிப்பதாக நாங்கள் கேள்விப்பட்டோம். குறிப்பாக இப்போதைய மத்திய அரசு காங்கிரசைவிட கார்ப்ரேட்டுகளுடன் அதிக நட்புறவு கொண்டுள்ளது). எனினும் டோங்கிரியா கோந்துகள் ஒருபோதும் நிறுவனத்தை அனுமதிக்கக் கூடாது என்பதில் எச்சரிக்கையாக உள்ளனர்.
வளர்ச்சி, நல்வாழ்வு குறித்து டோங்கிரியா கோந்த் மக்களின் பார்வையை அறிய சக ஊழியர்கள் சிலருடன் நான் நியாம்கிரி சென்றிருந்தேன். அவர்கள் சுரங்கத்தை எதிர்த்தார்கள், ஒருவேளை வளர்ச்சி எனும் கருத்தையே நிராகரிக்கிறார்களா? இப்படி இருப்பதே போதும் என நினைக்கிறார்களா? “வெளியில்” இருந்து வரும் எதையும் அவர்கள் நிராகரிக்கிறார்களா? அல்லது சில வசதிகள் அவர்களுக்கு தேவைப்படுகிறா- உதாரணத்திற்கு அரசின் நலத்திட்டங்கள்? அவர்களின் சமூகத்திற்குள் மாறுபட்ட கருத்துகள் உள்ளனவா?
டோங்கிரியா கோந்துகளின் கிராமங்களுக்குச் சென்றதுடன், இயக்க தலைவர்கள் சிலருடன் உரையாடியதில் சுரங்கத்தை அவர்கள் எதிர்ப்பதற்கு வலுவான ஆன்மிக, பகுத்தறிவு அடிப்படையிலான காரணங்கள் உள்ளதை நாங்கள் உணர்ந்தோம். அப்பிராந்தியத்தின் கடவுளாக கருதப்படும் நியாம் ராஜா வகுத்த விதிகளில், காடுகள் மற்றும் ஆறுகளைப் பாதுகாத்தல், தனிப்பட்ட சொத்தை விட வளங்கள் மீது பொது பாதுகாப்பு மற்றும் பொது உழைப்பு மற்றும் அதன் பலன்களைப் பகிர்ந்து கொள்வது ஆகியவை அடங்கும். இத்தகைய சூழ்நிலையில், சுரங்கம், பெரிய சாலைகள், தொழிற்சாலைகள் போன்ற பெரிய ஊடுருவல்கள் தேவையற்றவை. முனிகுடா, புவனேஸ்வர் நகரங்களைப் போன்று தங்கள் நியாம்கிரி மாறுவதை விரும்பவில்லை என லட்டோ சிகாகோ, தாதி புசிகா போன்ற தலைவர்கள் தெளிவாக கூறுகின்றனர். நகரங்களில் நல்ல குடிநீர் கிடையாது. உடல்நலத்தை பாதிக்கும் மாசடைந்த காற்று, வீடுகளை விட்டு வெளியில் செல்லும் போது பூட்டுவது, அன்றாடம் பெண்கள் எதிர்கொள்ளும் துன்புறுத்தல்கள் மட்டுமே உள்ளன. வன உரிமை சட்டத்தின் கீழ் தனிப்பட்ட மனை ஒதுக்கீட்டை பெறுவது தனிஉடைமையை, காடுகள் அழிப்பை இன்னும் ஊக்குவிக்கும் என்பதை உணர்ந்த அவர்கள் ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் நியாம் ராஜா பெயரில் வாழிட உரிமை சட்டத்தின் கீழ் அங்கீகரிக்க கோருகின்றனர்.
ஊடுருவலின் வகைகள்
சில நயவஞ்சகமான முறையில் ஊடுருவல்கள் ஏற்கனவே துரதிர்ஷ்டவசமாக நடந்துவிட்டன. பழங்குடியினரிடம் “நாகரிகத்தை“ கொண்டு வருவதாக கூறி அரசு பொருத்தமற்ற “நலத்திட்டங்களை“ கொண்டு வர முயன்றது. அவர்களின் பள்ளிகள் அரிதாகவே செயல்பட்டன. இதனால் பழங்குடியின பிள்ளைகள் ஆசிரமப் பள்ளிகள் அல்லது உறைவிடப் பள்ளிகளில் ஒடியா மொழியில் (டோங்கிரியா கோந்துகள் குய் மொழி பேசுபவர்கள்) படிக்க வைக்கப்பட்டனர். பழங்குடியின கலாச்சாரம் என்பதற்கு பதிலாக பொது நீரோட்டத்தில் அவர்களை கலக்க வைக்க அரசு முனைகிறது. அரசியல்வாதிகள், விஞ்ஞானிகள் போன்ற பிரபலங்களின் ஆதரவில் புவனேஸ்வரில் செயல்படும் புகழ்பெற்ற கல்வி நிறுவனம் ஒன்று கல்வி அளிப்பதாக கூறி ஒடிசா முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பழங்குடியின பிள்ளைகளை கொண்டு வந்துள்ளது. பழங்குடிகளின் பகுதிகளில் சுரங்கங்கள், தொழிற்சாலைகள் அமைப்பதற்காக கார்ப்பரேட்டுகள் நிதியுதவியில் அவர்களுக்கு கல்வி கற்பிக்கப்படுகிறதா அல்லது மூளைச்சலவை செய்யப்படுகிறதா என்ற சந்தேகம் செயற்பாட்டாளர்களிடையே எழுகிறது.
அரசின் நோக்கத்தில் சந்தைப்படுத்தலும் உள்ளது. இதுவரை டோங்கிரியா கோந்துகளின் பொருளாதாரம் முற்றிலும் பணத்தை சாராமல் இருந்து வந்தது. சிறிய தேவை கூட பணம் செலவிட வேண்டி உள்ளதால் இப்போது அவர்களுக்கு பணத் “தேவை“ என்ற ஒன்று ஏற்பட்டுள்ளது. அவர்கள் சந்தையில் விற்கும் பொருட்கள் மட்டும் அடிமாட்டு விலைக்கு போகிறது. இந்தியாவில் பழங்குடியினர், சந்தைக்கு எப்போது வந்தாலும் பாதகத்தையே சந்திக்கின்றனர்.
இறுதியாக காவலர்கள், பிற பாதுகாப்புப் படைகள் என்ற பெயரில் ஊடுருவல்கள் நிகழ்ந்து வருகின்றன. இப்பகுதியில் நக்சலைட் நடமாட்டம் அதிகமுள்ளதாக கூறி மாநில அரசு அவ்வப்போது ரோந்துகள் மேற்கொள்கின்றன. பழங்குடி தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் விசாரிக்கப்பட்டு தீவிரவாதம், தேடுதல் வேட்டை என்றப் பெயரில் குற்றம் சுமத்தப்படுகின்றனர். இதனால் அவர்கள் சொந்த மக்களால் வெறுக்கப்படுகின்றனர்.
டோங்கிரியா கோந்துகள் இதுபற்றி அறிந்துள்ளனர். எனினும் அவற்றை அவர்களுக்கு கையாள தெரியவில்லை. தங்கள் வீடுகளில் பொருத்தமற்ற உலோக கூரைகளை (சுவர்கள் மண்ணில் இருக்கின்றன) அமைப்பது தற்போது அதிகரித்து வருவது, இதுவே அவர்களின் குழப்பமான மனநிலையின் அறிகுறி. இதுபோன்ற கூரைகள் கோடை காலத்தில் அதிக வெப்பத்தை தருவதாக அவர்கள் புகார் கூறுகின்றனர். பின்னர் எதற்காக பாரம்பரிய ஓலைக் கூரைகளை மாற்றினர்? “அரசு எங்களுக்கு உலோக கூரைகளை தான் தருகிறது என்கின்றனர். சத்தான உள்ளூர் சிறுதானியங்கள், பயறு வகைகளை விடுத்து ஏன் வெள்ளை அரிசி உண்ணுகிறீர்கள் என்ற கேள்விக்கும் அவர்களிடம் இதே பதில் தான் உள்ளது. பண பரிவர்த்தனை உள்ளே வந்ததுதான் இந்த சிக்கலுக்கு காரணமா என்ற எங்கள் கேள்விக்கு விடை கிடைக்கவில்லை. பல டோங்கிரியா கோந்த் குடும்பங்கள் தங்கள் பிள்ளைகளை நல்ல எதிர்காலம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பெரிய பள்ளிகளுக்கு அனுப்புகின்றன. எனினும், அவர்களில் பலர் தங்கள் சொந்த கிராமங்களிலேயே படிக்க விரும்புவதாகவும், டோங்கிரியா கோந்த் ஆசிரியர்கள் குய் மொழியில் கற்பிப்பதோடு, வனம் சார்ந்த அறிவை அளிப்பதாகவும் கூறுகின்றனர்.
ஒரு முழுமையான விவரணை
சுரங்க எதிர்ப்பு போராட்டத்தின் நேர்மறை விளைவாக நியாம்கிரி சுரக்ஷா சமிதி உருவாக்கப்பட்டது, இது அனைத்து டோங்கிரியாகோந்த் குடியேற்றங்களையும்ஒன்றிணைக்கிறது. சட்டவிரோதமாகசாராயம் காய்ச்சுவதற்குஎதிரான இயக்கம் போன்ற பிற பிரச்னைகளையும் சமிதி கையில் எடுத்துள்ளது. பழங்குடியினர் எதிர்கொள்ளும்பிற கடுமையான பிரச்னைகளுக்கும் தீர்வு காண இதுதயாராக உள்ளது.
சில கட்டுப்பாடுகளுடன் உரையாடியதால் நாங்கள் அமைத்த சிக்கலான கேள்விகள் அனைத்திற்கும் பதில் கிடைத்துவிட்டதாக கூற முடியாது. ஆனால்நியாம்கிரியை ஒரு இடமாகவும், ஒரு கதையாகவும் மறுஆய்வு செய்யவேண்டும் என்று நமது நோக்கத்திற்கு வலு சேர்ந்தது. டோங்கிரியாகோந்த் மக்கள் தங்கள் கடந்த காலம் மற்றும் நிகழ்காலத்தைப் பற்றிய புரிதலின் அடிப்படையில், தங்கள் சொந்த எதிர்காலத்தை தீர்மானிக்கஉதவுவதற்கு, அவர்களுக்குவெளியே உண்மையிலேயேஅக்கறை கொண்ட எவரிடமிருந்தும் ஆழ்ந்த பச்சாத்தாபம் மற்றும் புரிதல் தேவைப்படுகிறது. டேவிட்டுக்கும் கோலியத்துக்கும் இடையேயான கதை சக்திவாய்ந்தது. அது, ஊக்கப்படுத்தினாலும் முழுமையானதல்ல. சந்தையும் அரசும் பிரிக்க முடியாதபடி அவர்கள் வாழ்வில் பிணைந்துள்ளன. டோங்கிரியா கோந்த், பொது சமூக அமைப்புகள்மற்றும் அரசுக்கு இடையே ஒருங்கிணைப்புத் தேவை, அவர்கள் எதிர்கொள்ளும் மிகவும் கடினமான சவால்களுக்கு தீர்வுகளை கண்டறிய வேண்டும், இயற்கையுடன்இணைந்து வாழ்வது குறித்து உலகின் பிற பகுதிகளுக்கு அவர்களின் பாடம் தொடரவேண்டும்.
இந்த கட்டுரை முதன்முதலில் ஜனவரி 2 ஆம் தேதி தி இந்து நாளிதழில் வெளியானது:
http://www.thehindu.com/opinion/op-ed/comment-on-niyamgiri-and-fight-between-dongria-kondh-tribal-group-and-vedanta/article6745650.ece
தமிழில்: சவிதா


