"சட்னி, சட்னி வறுவல்!"
அருணாச்சல பிரதேசத்தில் பட்கை மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கனுபாரியில் சிவப்பு எறும்புகள் கொண்டு சட்னி தயாரிக்கின்றனர். இலைகளில் கைப்பிடிகளாக குவித்து வைக்கப்பட்டுள்ள ஒளிரும் சிவப்பு எறும்புகள், இந்த ஈரமான, மழை பெய்யும் ஜூலை மாத காலை வாரச்சந்தையில் ரூ.20-க்கு விற்கப்படுகின்றன.
"எறும்புகளில் பல வகைகள் உள்ளன", என்று கனுபாரியில் வசிக்கும் போபின் குர்மி கூறுகிறார். "கருப்பு எறும்புகளை விட அம்லோய் (சிவப்பு எறும்புகள்) பிடிக்க எளிதானது என்பதால் அவை பரவலாக விரும்பப்படுகின்றன. அவை கடித்தால் தீங்கு விளைவதில்லை. அவை மா, பலா மரங்களில் காணப்படுகின்றன. அருணாச்சல பிரதேசத்தில் ஆசிய நெசவாளர் எறும்பு என்று அழைக்கப்படும் Oecophyllasmaragdina வகை எறும்பு உள்ளது.
நான் சில வாரங்கள் ஆசிரியராக பணிபுரிந்த மகாபோதி பள்ளியைச் சேர்ந்த பத்து வயது நயன்ஷிலா, ஒன்பது வயது சாம் ஆகியோர் எறும்புகளைப் பிடிக்கும் செயல்முறையை எனக்கு விவரிக்கிறார்கள். "ஒரு மரத்தின் கிளையில் எறும்புகளின் கூட்டைக் கண்டறிந்த பிறகு, அதை வெட்டி கொதிக்கும் நீரில் போடுகின்றனர். இறந்த எறும்புகளிலிருந்து இலைகளும் மண்ணும் நீக்கப்பட்டு உலர்த்தப்படுகின்றன." பின்னர் அவற்றை வறுத்து சட்னி செய்யலாம். இது கொஞ்சம் புளிப்பு சுவையாக இருக்கும் என்று அம்மாணவர்கள் என்னிடம் கூறுகின்றனர்.
அருணாச்சலப் பிரதேசத்தின் லாங்டிங் மாவட்டத்தில் உள்ள கனுபாரி வட்டத்தில் வியாழக்கிழமை வாரச்சந்தை நடைபெறுகிறது. கனுபாரி குடியிருப்பு வாசிகளுக்காக 70 கிலோமீட்டர் தொலைவில் மற்றொரு பெரிய சந்தையும் உள்ளது. உள்ளூர்வாசிகள் தங்கள் அன்றாட தேவைகளுக்கு இங்கே பொருட்களை வாங்க விரும்புகிறார்கள். இங்கிருந்து அசாம் எல்லை ஒரு கிலோ மீட்டருக்கும் குறைவான தொலைவில் உள்ளது. மேலும் அண்டை மாநிலத்திலிருந்தும் தங்கள் விளைபொருட்களை வாங்கவும், விற்கவும் வருகை தருகின்றனர்.











