“அப்ரி ஜோ ஆயேகா நா வோட் லேனே, தா கஹேங்கே கி பஹலே பென்ஷன் தோ [அவர்கள் வாக்கு கேட்க வரும்போது, ‘முதலில் எங்களுக்கு ஓய்வூதியம் கொடுங்கள்’ என்று அவர்களிடம் கேட்போம்],” என்கிறார் லிடாட்டி முர்மு.
ஜார்க்கண்ட்டின் தும்கா மாவட்டத்தில் உள்ள குசும்தி கிராமத்தின் குக்கிராமமான புருடோலாவில் உள்ள தனது மண் வீட்டிற்கு வெளியே ஒரு தட்டியில் (மேடையில்) அமர்ந்து அவர் பாரியிடம் பேசுகிறார்.
"நாங்கள் இம்முறை வீடுகளும், ஓய்வூதியங்களையும் கோருவோம்," என்று அவருக்கு அருகில் அமர்ந்திருக்கும், அவரது அண்டை வீட்டாரும், தோழியுமான ஷர்மிளா ஹெம்ப்ராம் கூறுகின்றார்.
அரசியல் தலைவர்களைக் குறிப்பிட்டு, "இந்த ஒரு முறை மட்டுமே அவர்கள் வருவார்கள்," என்று நகைச்சுவையாகக் கூறுகிறார். வாக்குப்பதிவுக்கு முன் வரும் அவர்கள், கிராமத்தில் உள்ளவர்களுக்கு பணம் கொடுப்பது வழக்கம். "அவர்கள் [அரசியல் கட்சிகள்] எங்களுக்கு 1,000 ரூபாய் கொடுப்பார்கள், அதில் ஆண்களுக்கு 500ம், எங்களுக்கு 500ம் கொடுப்பார்கள்," என்கிறார் ஷர்மிளா.
அரசாங்கத் திட்டங்கள் மற்றும் பலன்கள் பெரும்பாலும் இவர்களுக்கு கிடைக்காததால், இந்த பணம் ஏதோ ஒரு செலவுக்கு உதவுகிறது. லிட்டாட்டியின் கணவர் 2022 இல் திடீரென காலமானார் மற்றும் ஷர்மிளாவின் கணவர், ஒரு மாதம் நோய்வாய்ப்பட்டிருந்து பின்னர் 2023 இல் இறந்தார். துக்கத்தில் இருக்கும் இந்த பெண்கள், தாங்கள் வேலைக்குச் செல்லும்போது ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருப்பதாகக் கூறுகிறார்கள்.
கணவர்களை இழந்தபோது, லிடாட்டி மற்றும் ஷர்மிளா இருவரும், சர்வஜன் பென்ஷன் யோஜனா திட்டமான, விதவை ஓய்வூதியத் திட்டத்தைப் பெற முயன்றனர். இத்திட்டதின் படி 18 வயதுக்கு மேற்பட்ட விதவைகளுக்கு மாத ஓய்வூதியமாக ரூ. 1,000 வழங்கப்படுகிறது. "நாங்கள் பல படிவங்களை பூர்த்தி செய்தோம், முக்கியாவைக் [கிராமத் தலைவர்] கூட சென்று சந்தித்தோன், ஆனால் எங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை." என்கிறார் விரக்தியடைந்த லிட்டாட்டி.












