"என் பெயர் துளசிபாய் நரன்பாய். நீங்கள் என்னைக் காணவேண்டும் என்றால், 'பச்சனை கூப்பிடுங்கள்' என்று சொல்ல வேண்டும். அப்படித்தான் எல்லோருக்கும் என்னைத் தெரியும்," என ஒரு திரைப்பட சூப்பர் ஸ்டாரின் பெயரால் தான் அன்பாக அழைக்கப்படும் காரணத்தை விளக்குகிறார் துளசிபாய்.
60 வயதாகும் இவர் தனது மகன் தனுபாயுடன் அகமதாபாத்தில் உள்ள ஒரு ஆக்கிரமிப்பு குடியிருப்பான குல்பாய் டெக்ரா அருகே நடைபாதையில் வசித்து வருகிறார். தனுபாய் பிறந்ததும் அவரது மனைவி இறந்துவிட்டார். "என் பாட்டி தான் என்னை வளர்த்தார். நூறு வயதைக் கடந்தும் அவர் இன்னும் உயிருடன் இருக்கிறார்," என்கிறார் 30 வயதாகும் தனுபாய்.
தந்தையும் மகனும் காலை ஒன்பது முதல் இரவு ஒன்பது மணி வரை குப்பைகளை சேகரித்து, நகரத்தின் ஒரு தாலுகாவான மேம்நகரில் உள்ள பங்கர்வாலாக்களுக்கு (ஸ்க்ராப் டீலர்கள்) தங்கள் குப்பைகளை கிலோகிராம் கணக்கில் விற்கிறார்கள்.
நம் நிருபர் அவர்களைச் சந்தித்த அன்று, மதியம் இரண்டு மணி வரை, சுமார் நான்கு கிலோ பிளாஸ்டிக் பாட்டில்களையும் ஒரு கிலோ பெட்டிகளையும் சேகரித்திருந்தனர். இதன் மூலம் ஸ்க்ராப் டீலர்களிடமிருந்து ரூ.110 சம்பாதித்தனர். “இந்த முறை கோடை வெப்பம் அதிகம்,” என்கிறார் துளசிபாய். “உடல்நலம் பாதிக்கப்படலாம். வெயில் அதிகமாக இருக்கும் போது, விசிறிக் கொள்ள நாங்கள் எடுக்கும் அட்டைகளைப் பயன்படுத்துவோம்.”






