“கோரல் மான்!” எனக் கத்துகிறார், அருணாச்சல பிரதேசத்தின் மேற்கு காமேங் மாவட்டத்தில் சிங்சுங் டவுன் நோக்கி செல்லும் அமைதியான சாலைகளில் வண்டியோட்டியபடி டாக்டர் உமேஷ் ஸ்ரீநிவாசன்.
சற்று தூரத்தில் குட்டையான, பருத்த ஆடு போன்ற ஒரு விலங்கு, மலையிலிருந்து இறங்கி சாலையைக் கடந்து மேற்கு இமயமலையின் காடுகளுக்குள் செல்கிறது.
“இதற்கு முன் இப்படி நீங்கள் பார்த்திருக்க முடியாது,” என்கிறார் ஆச்சரியத்தில் இருக்கும் அந்த வன உயிரியலாளர். மேற்கு காமேங்கின் காடுகளில் அவர் 13 வருடங்களுக்கும் மேலாக பணிபுரிந்து வருகிறார்.
சாம்பல் நிற கோரல் கால்நடை வகையை சேர்ந்த பாலூட்டி இனம் ஆகும். இமயமலையின் பூட்டான், சீனா, வட இந்தியா, நேபாளம் மற்றும் பாகிஸ்தான் போன்ற இடங்களில் காணப்படுபவை. ஆனால் 2008-ம் ஆண்டில், இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச யூனியன் (IUCN), வாழ்விட இழப்பால் அருகி வரும் இனமாக அவற்றை வரையறுத்திருக்கிறது.
“அவை எப்போதும் அடர்ந்த காடுகளுக்குள்தான் இருக்கும். வெளியே வர அஞ்சும்,” என்கிறார் உமேஷ், மனித நடமாட்டம் அதிகம் இருக்கும் இமயமலையின் கீழ்ப்பகுதி மற்றும் வடகிழக்கு இந்தியாவில் காணப்படும் அந்த விலங்குகளை குறித்து.
கோரல் மானை பார்த்த சற்று நேரத்துக்குப் பிறகு, சிங்சுங்கில் வசிக்கும் விவசாயியான நிமா செரிங் மோன்பா, தேநீர் தந்து, இன்னொரு விலங்கை பார்த்த அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார். “சில வாரங்களுக்கு முன், நான் விவசாய நிலத்தில் சிவப்பு பாண்டாவை பார்த்தேன்.” அழிந்து வரும் இனமான சிவப்பு பாண்டா சீனா, மியான்மர், பூட்டான், நேபாள் மற்றும் இந்தியா ஆகிய இடங்களில் காணப்படுகின்றன. ஆனால் அவற்றின் எண்ணிக்கை கடந்த மூன்று தலைமுறைகளில் 50 சதவிகிதம் குறைந்திருக்கிறது. அடுத்த இருபது ஆண்டுகளில் இன்னும் மோசமாகும் என எச்சரிக்கிறது IUCN.






















