அம்பியா காதுனின் வெளுத்த வெள்ளைப் புடவையின் முந்தானையில் உள்ள ஊதா நிறப்பூக்கள் நவம்பர் மாத காற்றில் படபடக்கும் போது தனது கூந்தலை மூட அவர் முயலுகிறார். சிக்கலாகக் கிடக்கும் சணல் துணியைச் சுருட்டியும், உருட்டியும், முடிச்சுகள் இட்டும் அவர் கையாளும் அதே வேளையில், அவரது வலது கை பர்தாவைச் சரிசெய்ய தலையை நோக்கி நகர்கிறது. சதுப்பு நிலத்தின் விளிம்பில் அமைந்துள்ள தனது தற்காலிக குடிசையை கடந்து செல்லும் ஆண்களின் பார்வையை அம்பியா நன்கு உணர்ந்திருக்கிறார். பருவமழைக் கால வெள்ளப்பெருக்கின்போது, பெகி ஆற்றின் அரிப்புக்குள்ளான கரைகளில் தனிமைக்கு இடமில்லை.
தன் வீட்டுத் தரையில் அமர்ந்திருக்கும் அம்பியா, 'சிகா' ('சிகாஸ்' என்றும் அழைக்கப்படும்) அலங்காரத் தோரணங்களை செய்கிறார். சணல் இழைகளால் செய்யப்படும் இவை, சமையல் பாத்திரங்கள், விதைகள், ஆடைகள், மெத்தைகள் மற்றும் நகைகள் கூடத் தொங்கவிடப் பயன்படுகின்றன. சிகா என்பது வெறும் அலங்காரப் பொருள் மட்டுமல்ல; இது அசாமின் மியா முஸ்லிம்கள் மற்றும் தற்போதைய வங்கதேசத்தின் கிராமப்புற மக்களிடையே பிரபலமாக உள்ள, கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொருளாகும். வெள்ள அபாயம் அதிகம் உள்ள இப்பகுதிகளில், பொருட்களை ஈரப்பதமின்றி உலர்வாக வைத்திருக்கவும் சிகா உதவுகிறது.
71 வயதாகும் இந்த கைவினைஞர் அதிகாலையில் எழுந்து தனது அன்றாட வீட்டு வேலைகளை முடித்துவிட்டு கைவினைப் பொருட்களை செய்ய அமர்கிறார். பூசணிக்கொடி படர்வின் நிழலில் அமைந்துள்ள, தகரமும் வைக்கோல் கூரையும் கொண்ட ஒற்றை அறை வீட்டின் முன்பகுதியே அவரது பணிக்கூடம். அகன்ற பச்சிலைகள் கொண்ட அக்கொடிகளின் ஊடாக வடிகட்டி வரும் சூரிய ஒளியில், அந்த வண்ணமயமான மணிகள் மின்னுகின்றன.
















