முதல்முறையாக மன்வார் பேவாவின் பக்கெட் காலியாக உள்ளது. ஆலை மூடப்பட்டுள்ளது. முன்ஷியை 20 நாட்களுக்கு மேலாக காணவில்லை. குடும்பத்திற்கு உணவளிக்க அவரிடம் பணமில்லை. ‘கருப்புப் பணத்திற்கு‘ எதிராக நாட்டின் சில பகுதிகளில் மக்கள் போராடுவதுதான் தன் துயரத்திற்கு காரணம் என்று அறிந்துள்ளதாக மன்வாரா கூறுகிறார்.
45 வயதாகும் மன்வாரா 17 ஆண்டுகளாக தனது குடும்பத்திற்காக பீடி சுருட்டி வந்தார்- 1000 பீடிகள் சுருட்டினால் ரூ.126 கிடைக்கும். கணவனை இழந்த பிறகு அவர் இந்த வேலையை தொடங்கினார். நிலமற்ற இத்தம்பதிக்கு இரண்டு மகன்கள். அப்போது இளையவருக்கு ஆறு மாதங்கள். தனது இளம் வயதில் ஒரு நாளுக்கு 2000 பீடிகள் வரை சுற்றினார். இப்போது அவரால் 500 மட்டுமே முடிகிறது.
மேற்கு வங்கத்தில் வீட்டிலிருந்து பீடி சுற்றும் தொழிலாளர்களில் 70 சதவிகிதத்திற்கு அதிகமானோர் பெண்கள் என்று மாநில தொழிலாளர் துறை தெரிவிக்கிறது. “இங்கு பீடி சுற்றத் தெரியாவிட்டால் ஒரு பெண்ணுக்கு வரன் கிடைப்பது கஷ்டம்,” என்கிறார் முன்ஷி மணிருல் ஹக்- தொழிலாளர்களின் வீடுகளுக்கு மூலப் பொருட்களை விநியோகித்து இறுதி தயாரிப்பாக பீடியை பெறும் ஒப்பந்தக்காரர்- மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டம் ஜாங்கிப்பூர் துணைப் பிரிவில் உள்ளது ஆலை.






