ரமேஷ் ஜக்தாப்பிற்கு அது மோசமான நாளாக அமைந்துவிட்டது. அன்று காலை தன் மனைவி கங்குபாயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அந்தச் சண்டைக்குப் பின் அவரது மனைவி பூச்சிக்கொல்லியைக் குடித்துள்ளார். சத்தேஃபல் கிராமத்தில் இருந்து 30 கி.மி தொலைவில் ஒஸ்மானாபாத் நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அவரை ஷேர் ஆட்டோவில் அழைத்துச் சென்றுள்ளார். “அந்தப் பயணத்தின்போது என் இதயம் இதுவரை இல்லாத அளவு மிகவும் வேகமாகத் துடித்தது,” என்கிறார். “நல்லவேளையாகச் சரியான நேரத்தில் மருத்துவர்களிடம் அவரை அழைத்துச் சென்றோம்.”
மதியம் மீண்டும் அவர் சத்தேஃபலுக்கு விரைந்தார். மாவட்டத்தின் கூட்டுறவு வங்கியின் உள்ளூர் கிளை, அரசின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்குப் பணம் வழங்கிக்கொண்டிருந்தது. “நான் திரும்பி வந்து (வங்கியின்) வரிசையில் ஒரு மணிநேரத்திற்கு மேல் நின்றுகொண்டிருந்தேன்,” என்கிறார் ஜக்தாப். “ஆனால் வங்கியோ தொகையின் ஒரு பகுதியை மட்டுமே விடுவித்தது.” அதுவும் தனக்கு முன்பு டோக்கன் எடுத்து வைத்திருந்த விவசாயிகளுக்கே தரப்பட்டது.
50 வயதான ஜக்தாப், தனது 5 ஏக்கர் நிலத்தில் சோயா அவரை, சோளம் மற்றும் கோதுமையைப் பயிரிடுகிறார். விடிந்தால், எண்ணற்ற பிரச்சனைகளை அவர் எதிர்கொள்ள இருக்கிறார். ஏற்கெனவே அவருக்கு 1.20 லட்சம் ரூபாய் வங்கிக் கடனும், தனியாரிடம் 50,000 ரூபாயும் கடன் உள்ளது. “முந்தைய ஆண்டுகளில் ஏற்பட்ட வறட்சிக்காகவும் என் மகளின் திருமணத்திற்காகவும் கடன் வாங்கியுள்ளேன்,” என்கிறார். “கடனைத் திருப்பிச் செலுத்துவது தாமதமாவதால் கடன்காரர்கள் எங்களை ஒவ்வொரு நாளும் இழிவாக நடத்துகின்றனர். இதனாலேயே என் மனைவியுடன் சண்டை ஏற்பட்டது. அவரால் இந்த மன அழுத்தத்தையும், அவமானத்தையும் ஏற்க முடியவில்லை. எனவே பிரச்சனை முற்றியபோது விஷம் குடித்துவிட்டார். நான் எனது கடன்களைத் திருப்பிச் செலுத்த வேண்டும். பருவமழை வருவதற்கு முன் என் நிலத்தைத் தயார் செய்ய எனக்குப் பணம் வேண்டும்.”
நிதி தேவையின் காரணமாக கங்குபாயை மருத்துவமனையில் விட்டுவிட்டு சத்தேஃபலுக்கு ஜக்தாப் விரைந்தார். 2014-15ம் ஆண்டின் குறுவை சாகுபடிக்கான பயிர் காப்பீடு மூலம் அரசிடமிருந்து 45,000 ரூபாயைப் பெற அவர் தகுதி பெறுகிறார். மார்ச் 4 அன்று ஜக்தாப் போன்ற 2,68,000 விவசாயிகளுக்குச் சேர வேண்டிய 159 கோடி ரூபாயை ஒஸ்மானாபாத் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் (ODCC – ஓ.டி.சி.சி) அரசு செலுத்தியது. இரண்டு மாதங்களுக்குப் பிறகு வெறும் 42 கோடி மட்டுமே விநியோகம் செய்யப்பட்டது.






