கொரிலா வெங்கடாச்சாரியின் மூன்று அறை கொண்ட வீட்டின் தரையில் பொம்மைகள் சிதறிக் கிடக்கின்றன. ஒரு மூலையில் பெயின்ட் டப்பாக்களும், மறுபக்கம் பயன்படுத்தாத மரத் துண்டுகளும் கிடக்கின்றன. “நான் 28 ஆண்டுகளாக பொம்மைகள் செதுக்கும் வேலையை செய்து வருகிறேன்,” என்றார் அவர் பெருமையுடன்.
ஆந்திர பிரதேசம் மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள கொண்டபள்ளி (அப்படியே மொழிப்பெயர்த்தால் குன்றுகளின் கிராமம்) கிராமத்தில் வெங்கடாச்சாரி போன்று 229 பொம்மை கைவினைஞர்கள் உள்ளனர். பசுமையான கிழக்குத் தொடர்ச்சி மலை மற்றும் நர்லா டாடா ராவ் அனல் மின் நிலையம் ஆகியவற்றால் சூழப்பட்ட ஒரு கிராமம்.
அவரும், அவரைப் போன்ற பிற கைவினைஞர்களும தனித்துவமான கொண்டபள்ளி பொம்மைகளை பல தலைமுறைகளாக செய்து வருகின்றனர். அவரது முழு குடும்பமும் இக்கலையை தொழிலாக செய்கிறது. அவர் மரத்தை செதுக்கினால், அவரது மனைவி ஜோதி பொம்மைகளுக்கு வண்ணம் பூசுகிறார். 10ஆம் வகுப்பு வரை படித்துள்ள அவர்களது 18 வயது மகள் மவுனிகா பொம்மைகள் செய்ய பெற்றோருக்கு உதவி வருகிறார்.








