செய்யாத குற்றத்துக்காக டெம்பு மஞ்சி சிறையிலிருப்பதாக அவரின் குடும்பம் சொல்கிறது.
ஜெஹனாபாத் நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டபோது, அவரின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டு சாட்சிகளாக முன் வைக்கப்பட்ட பொருட்கள், அவரது வீட்டை சேர்ந்தவைதான் என்பதை போலீஸால் நிரூபிக்க முடியவில்லை என்கிறது குடும்பம்.
அவரின் 35 வயது மனைவியான குணா தேவி சொல்கையில், “பொய் வழக்கில் அவர் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறார்,” என்கிறார்.
அவரின் நம்பிக்கைக்கு வலு சேர்ப்பது போல், டெம்பு குற்றஞ்சாட்டப்பட காரணமாக இருந்த ஐந்து சாட்சிகளும் காவலர்கள்தான். அவரின் விசாரணையில் ஒரு தனித்த சாட்சி கூட சாட்சியம் கூறவில்லை. பிகாரின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை (திருத்த) சட்டம் 2016-ன்படி அவர் விசாரிக்கப்பட்டார்.
“மதுபானம் எங்கள் வீட்டின் பின்னால் இருந்த வயலில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நிலத்தின் உரிமையாளர் யாரென எங்களுக்கு தெரியாது. காவலர்கள் கண்டுபிடித்த மதுவுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சொன்னோம்,” என்கிறார் குணா தேவி. ஆனால் அவர்கள் அவரை பொருட்படுத்தவில்லை. “மது உங்களின் வீட்டுக்கு பின்னால்தான் கண்டுபிடிக்கப்பட்டது. வேறு யார் காரணமாக இருக்க முடியும்?,” என்றார்கள் காவலர்கள் அவரின் மன்றாடலை புறம் தள்ளி.
டெம்பு மஞ்சி 2019-ல் சிறைக்குள் தள்ளப்பட்டார். மூன்று வருடங்கள் கழித்து மார்ச் 25, 2022 அன்று ஐந்து வருட கடுங்காவல் தண்டனையும் வீட்டில் மது காய்ச்சி விற்றதற்காக ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தும் தீர்ப்பளிக்கப்பட்டது.
டெம்பு மஞ்சி மற்றும் குணா தேவி ஆகியோர், அவர்களின் நான்கு குழந்தைகளுடன் ஜெஹனாபாத் மாவட்டத்தின் கெனாரி கிராமத்திலுள்ள ஓரறை வீட்டில் வசிக்கின்றனர். அவர்கள் முசாகர் சமூகத்தை சேர்ந்தவர்கள். முசாகர் வசிப்பிடத்தில்தான் வசிக்கின்றனர். ரெய்டு நடந்த மார்ச் 20, 2019 அன்று டெம்பு வீட்டில் இல்லை. நிலவுடமையாளர்களுக்காக அறுவடையை சுமந்து அவர்களின் வீட்டுக்கு கொண்டு சேர்க்கும் உதவியாளர் வேலைக்காக சீக்கிரமாகவே கிளம்பி சென்று விட்டார்.












