வித்தல் சவான் இரண்டு மாதங்களாக அழைப்பிற்காக காத்திருக்கிறார். அரசு தன்னிடமுள்ள ஒன்பது குவிண்டால் துவரம் பருப்பை கொள்முதல் செய்யும் என்ற நம்பிக்கையில் அவர் ஃபிப்ரவரி 28ஆம் தேதி உஸ்மானாபாத்தின் கலம்ப் தாலுக்காவில் உள்ள NAFED மையத்திற்கு சென்று பதிவு செய்திருந்தார். ஆனால் அலுவலர் அவரது பெயர் மற்றும் மொபைல் எண்ணை ஒரு நோட்டில் குறித்துக் கொண்டு, “உங்களுக்கு அழைப்பு வரும்,“ என்றுக் கூறினார்.
“நான் அவ்வப்போது அவர்களுக்கு அழைத்துப் பார்த்தேன். ஃபிப்ரவரி 28-ம் தேதிக்கு பிறகு 4-5 முறை மையத்திற்கு நேரிலும் சென்று வந்தேன்,“ எனும் அவர், மே மாத தொடக்கத்தில் கடுமையான வெயிலில் மையத்தின் அலுவலக மேசை அருகே அமர்ந்திருக்கிறார். வித்தலுக்கு பங்கானில் ஒன்பது ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அவர் 25 கிலோமீட்டர் பயணித்து கலம்பிற்கு மீண்டும் வந்து தனது துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்படுமா என கேட்க வந்துள்ளார். அவரைப் போன்று பல விவசாயிகளை அங்கு காண முடிந்தது. “அவர்கள் கிடங்கு நிரம்பிவிட்டது அல்லது போதிய சாக்கு பை இல்லை என்கின்றனர். இப்போது காலக்கெடு முடிந்துவிட்டது, என்னிடம் பதிவு செய்ததற்கான எந்த ஆதாரமும் கிடையாது.“
கடந்த ஆண்டு துவரம் பருப்பின் அமோக விளைச்சல் காரணமாக 2016 டிசம்பர் மத்தியில் மகாராஷ்டிரா அரசு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் தாலுகாக்களில் இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு (NAFED) மையங்களை அமைத்தது. விவசாயிகளிடமிருந்து விளைபொருட்களை கொள்முதல் செய்யும் வியாபாரிகள், அபரிமிதமான பருப்புக்கு அடிமாட்டு விலை கொடுத்து கொள்ளையடிக்காமல் தடுக்கும் நோக்கில்.
ஆனால் NAFED மையங்கள் இதற்கு முழுமையாக தயாராகவில்லை. கலம்ப் மைய அலுவலர் இதை மறுக்கவில்லை. அவர் கலம்பின் வேளாண் உற்பத்தி சந்தைப்படுத்தல் குழுவின் செயலாளர் எஸ். சி. சவானிடம் ஆலோசனையில் ஈடுபட்டார். “நாங்கள் அறிக்கை தயாரித்து அரசுக்கு அனுப்புகிறோம்,“ என்கிறார் சவான். “விவசாயிகள் பலர் காலக்கெடுவிற்கு முன்பே தங்கள் துவரம் பருப்பை கொண்டு வந்துவிடுகின்றனர். சில காரணங்களால் எங்களால் அதை ஏற்க முடியவில்லை. அரசு இதற்கு உடனடியாக பதிலளித்தால், நாங்கள் அதற்கேற்ப நடப்போம்.“


