இந்திரா காலனி எனப்படும் பழங்குடியினர் கிராமத்தில் எனது வீடு உள்ளது. இங்கு பல்வேறு பழங்குடியின சமூகங்களைச் சேர்ந்த 25 குடும்பங்கள் வசிக்கின்றனர். எங்களுக்கு என நீர்த்தேக்க தொட்டி, கழிப்பறை, குடிநீர் வசதிகள் உள்ளன.
இக்கிராமத்தில் சிலரிடம் உள்ள விவசாய நிலத்தில் நெல், கத்திரிக்காய், சோளம், ஜூலானா, வெண்டைக்காய், பாகற்காய், பரங்கிக்காய், பருப்பு வகைகளில் கொலாதா[கொள்ளு], கந்துலா [துவரம் பருப்பு], பாசிப்பருப்பு போன்றவற்றை விளைவிக்கின்றனர். பெரும்பாலானோர் நாம் உண்ணும் நெல்லை விளைவிக்கின்றனர். மழைக் காலங்களில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
அறுவடை காலத்தில் சொந்த பயன்பாட்டிற்கு கொஞ்சம் நெல் வைத்துக் கொண்டு மிச்சத்தை விற்போம். உரங்கள் போன்ற உள்ளீட்டுச் செலவுகள் போக நெல் விற்பனையில் கொஞ்சம் பணம் மிஞ்சும்.
எங்கள் கிராமத்தில் சில கூரை வீடுகள் உள்ளன. கூரை வீடுகள் நம்மை வெப்பம், மழை, குளிரிலிருந்து காக்கிறது. ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கூரையை மாற்ற வேண்டும். வீடுகளை சீரமைக்க நாங்கள் அகுலி புல், சாலுவா, மூங்கில், லாஹி மற்றும் காட்டில் உள்ள மரங்களை பயன்படுத்துகிறோம்.








