மினாட்டி மார்டி அற்புதமான சூழலில் வாழ்கிறார். வீட்டுக்கு முன் அஜோய் ஆறு ஓடிக் கொண்டிருக்கிறது. இன்னொரு புறம், தூரத்தில் செல்லும் ரயிலுக்கும் அவரது வீட்டுக்கும் இடையே தாமரைக் குளங்கள் இருக்கின்றன.
முதுகுத்தண்டு மற்றும் கால்களில் காசநோயுடன் பிறந்து வளர்ந்த ஐந்து வயது சிறுமி தூரத்திலிருந்துதான் பார்க்க முடியும். மேற்குவங்க பிர்பும் மாவட்டத்தின் மஹுலா கிராமத்திலிருக்கும் அவர் நடக்கவோ சுற்றவோ முடியாது.
“அவளின் முதுகுத்தண்டு மோசமான நிலையில் இருந்தது,” என நினைவுகூருகிறார் அவரது பாட்டியான ஜபா மார்டி. “உயிரோடு இருப்பாளென்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை.”
மாநிலத்தின் பாதிக்கும் அதிகமான மக்கள்தொகையாக சந்தால் பழங்குடியினர் இருக்கின்றனர். அவர்கள் பெரும்பாலும் கிராமப்பகுதிகளில் வசிக்கின்றனர். உள்ளூர் மருத்துவர்களைதான் சார்ந்திருக்கின்றனர். ஆரம்ப சுகாதார நிலையங்கள் போன்ற சுகாதார வசதிகளில் மிக குறைந்த அலுவலர்களே இம்மாநிலத்தில் பணிபுரிகின்றனர். (Rural Health Statistics 2021-22).
குழந்தை மினாட்டிக்கு தீவிர சுவாசக் கோளாறுகள் ஏற்பட்டதும், அவரது குடும்பம் உள்ளூர் மருத்துவர் ஒருவரிடம் அழைத்து சென்றது. அவர் உண்மையான மருத்துவரா என்று அவர்களுக்கு தெரியவில்லை. பிர்பும் மாவட்டத்தின் ஸ்யூடி 1 ஒன்றத்தின் தூரப்பகுதியான இங்கு வசிக்கும் அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சான்றிதழ் பெற்ற மருத்துவர்களை எங்கு கண்டறிவது என தெரியவில்லை என்கிறார் ஜபா.


