கிப்பர் மக்களுக்கு அந்த காலை மிக அசாதாரணமாக இருந்தது. இமயமலையில் உள்ள அக்கிராமத்தில் வாழ்க்கை மிக அமைதியானது. ஆனால் இன்று அப்படி இல்லை. காரணம் புரியாமல் அருகிலிருந்த இளைஞர் தக்பாவிடம் இதுபற்றி கேட்டேன். “கடமா எனப்படும் காட்டு மாடுகளைத் தேடி ஆண்கள் இன்று புறப்படுகின்றனர். மேய்ச்சல்காரரான லுக்ஸி, டாஷிகாங் கிராமத்திற்கு அருகே மேய்ச்சல் நிலத்தில் கடமாவை பார்த்ததாகக் கூறினார். நேற்று மாலை கடமாக்களில் ஒன்று திமிறிக் கொண்டு ஓடிவிட்டதாகச் சொன்னார்!” ஸ்பிதி பள்ளத்தாக்கில் வசிக்கும் சமூகங்கள் பல நூற்றாண்டுகளாக விவசாயத்துடன் கால்நடை வளர்ப்பிலும் ஈடுபடுகின்றனர். அங்கு நிலவும் குறுகிய கோடைக் காலத்தில் விவசாயத்துடன் கால்நடைகளையும் வளர்த்து வாழ்வாதாரத்திற்கு இரட்டிப்பு வருமானத்தை அவர்கள் கொண்டுள்ளனர் என்பதே இதன் பொருள். அவற்றில் கடமா முக்கிய இடம்பெற்றுள்ளதற்கு பல காரணங்கள் உண்டு. புத்திசாலித்தனம் கொண்ட கடமாக்கள் விவசாயத்திற்கு வயல்களில் சிறப்பாக உதவும். குளிர் மாதங்களில் கடமாக்களின் கம்பளியும், சாணமும் இணையற்றது. அவற்றின் வால், முழு வெள்ளை நிறத்தில் புள்ளிகள் ஏதுமின்றி இருந்தால் உள்ளூர் சந்தையில் பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் விலை போகும். நமது அண்டை வீட்டாரில் ஒருவரான சுட்டிம், மணாலியிலிருந்து கடமா ஒன்றை அண்மையில் வாங்கி வந்துள்ளார். வயதான இந்த கடமா சுற்றுலாப் பயணிகளின் புகைப்படத்திற்கு நின்றே நாட்களை கழித்துவிட்டது. அது முற்றிலும் தனது எஜமானரால் வளர்க்கப்பட்டது. ஸ்பித்தியில் உள்ள மற்ற கடமாக்களை போலல்ல. இங்கு கடமாக்கள் வருடத்தில் பெரும்பாலும் சுதந்திரமாக மேய்ச்சலுக்கு விடப்படுகின்றன. அவை உணவிற்கு பசும்புற்களை தேடித் திரிகின்றன என்பதே இதன் பொருள். இதுபோன்ற சிரமம் இந்த வயதான கடமாவிற்கு கிடையாது. பசி வந்தாலும் கூட இது வெயிலில் திரியும். இதற்கு நாளடைவில் ஒரு கெட்ட பழக்கமும் வந்துவிட்டது. தனது பாதையில் யார் சென்றாலும் அவர்களை துரத்தும்.
நேற்று லுக்ஸி இந்த கடமாவிடம் மாட்டிக் கொண்டார். அவர் கிட்டத்தட்ட தனது உயிரை காப்பாற்றிக் கொள்ள ஓடினார் என்று சொல்லலாம். பிறகு ஊர்க்காரர்கள் ஒன்று சேர்ந்து அந்த வயதான கடமாவைப் பிடித்து வந்து தொழுவத்தில் கட்டி வைத்தனர். அன்றிலிருந்து அந்த வயதான கடமாவை என் ஜன்னல் வழியாக நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அது என்னை உற்றுப் பார்த்தபடி எச்சரிக்கும் வகையில் அசைப்போடுகிறது. சில நாட்களில் அது இரவுப் பகல் என்றில்லாமல், ஏதேனும் விநோத ஒலியை எழுப்புவதை கேட்டிருக்கிறேன். ஒரு மாலை நேரத்தில் நான் கிராமத்திற்கு வந்தபோது, மக்கள் மகிழ்ச்சியோடு இருந்தனர். ’இன்று விருந்து இருக்கிறது. இறைச்சியில் செய்யப்பட்ட கொழுக்கட்டை!’, என்று மகிழ்ச்சியில் எனது சின்னஞ்சிறு நண்பர் தக்பா கூறினார். மோமோஸ் என்றால் நீராவியில் வேக வைத்த கொழுக்கட்டைகள் – அது ஸ்பித்தியில் மகிழ்ச்சியான தருணங்களில் மட்டுமே செய்யப்படும் அனைவருக்கும் பிடித்தமான உணவு. அந்த மாலை நேரத்தில் கிராமமே திரண்டு இறைச்சி கொழுக்கட்டைகளை தக்காளி சட்னி தொட்டுக் கொண்டு சாப்பிட்டனர்.
மன நிறைவுடன் நாங்கள் வீடு திரும்பியபோது நிலா வெளிச்சம் வந்துவிட்டது. அவரவர் வீட்டை அடைந்தபோது ஏதோ ஒன்று குறைவதைப் போல உணர்ந்தேன். ‘எங்கே அந்த வயதான கடமா?’ என்று கேட்டேன். ‘அவன் தான் இறைச்சியாக நமது கொழுக்கட்டைகளில் இருந்தான்!’ என்றபடி தக்பா பயங்கரமாக சிரித்தான். என் அடிவயிற்றில் பதற்றம் தொற்றிக் கொண்டது. அந்த வயதான கடமா என் வயிற்றிலும் அசைப்போடுவதைப் போல உணர்ந்தேன்.
இமயமலை பகுதிகளில் காணப்படும் கடமாக்கள் வசீகரமான விலங்கு வகையைச் சேர்ந்தவை. ஒரு காட்டு கடமாவின் எடை 1 டன் வரை இருக்கும்! ஆனால் வளர்ப்பு கடமாக்கள் சிறிதாக இருக்கும். அவற்றின் உரிமையாளர்கள் அவற்றை பெரிதாக கண்டுகொள்வதில்லை. அதன் பாலில் இருந்து கிடைக்கும் வெண்ணெயில் நம்கீன் சாய் (பட்டர் டீ) செய்வார்கள். இப்பகுதிகளில் நிலவும் கடும் குளிரை எதிர்கொள்ள இந்த புத்துணர்வு பானம் உதவும். இப்பிராந்தியத்தில் கடமா பாலாடைக்கட்டியும் (சீஸ்) தயாரிக்கப்படுகிறது. உடல்நலத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும் இந்த சீஸ் சுவையிலும் சிறந்தது.
2014 ஆகஸ்ட் 13ஆம் தேதி தி இந்துவில் வெளியான இக்கட்டுரையை இங்கு படிக்கலாம்.
தமிழில்: சவிதா


