சம்பா வட்டியின் குழந்தையை ஒரு குரங்கு பறிக்க பார்த்தது. சொந்த ஊரான ராஜ்பூரிலுள்ள காட்டுக்கு சென்றபோது இது நடந்தது. இளம்தாயாக இருந்த அவர், குழந்தையை முதுகில் கட்டி, வாராந்திர சந்தையில் விற்கவென மஹுவா மற்றும் சால் விதைகளை சேகரித்துக் கொண்டிருந்தார்.
“வேலை பார்ப்பதற்காக ஒரு கணம்தான் அவனை தரையில் விட்டேன்,” என்கிறார் அவர். “உடனே குழந்தையை பறிக்க ஒரு குரங்கு முயன்றது.” விளைவாக, காட்டுக்கு செல்லும்போதெல்லாம் குழந்தையின் பாதுகாப்பு குறித்து அவரை பதட்டத்தில் இருக்கும் நிலை தொடர்ந்தது.
ஆனால் இப்போது அவர் குழந்தையை காட்டுக்குள் எடுத்து செல்ல வேண்டியதில்லை. சட்டீஸ்கரின் சம்பா போன்ற இளம் குழந்தைகளின் தாய்கள், அருகே இருக்கும் லைகா கர் எனப்படும் குழந்தைகள் காப்பகத்தில் விட்டுவிட்டு, பகலில் வருமானம் ஈட்டும் வேலை பார்க்க முடியும். ஏழு மாதம் தொடங்கி மூன்று வரையிலுமான வயதுகளில் உள்ள குழந்தைகள் இங்கு பராமரிக்கப்படுகின்றனர்.


















