நாம்தேவ் பங்க்ரே ஜனவரி 25 அன்று போராட்ட பேரணியை நிச்சயமின்மையுடன்தான் தொடங்கினார். மூன்று நாட்கள் கழித்து, வீட்டுக்கு அவர் நம்பிக்கையுடன் திரும்பியிருக்கிறார். அவரைப் போலவே ஆயிரக்கணக்கான நாசிக் மற்றும் அகில்யாநகரை சேர்ந்த விவசாயிகளும் திரும்பியிருக்கின்றனர்.
அகில்யாநகர் மாவட்டத்தின் காத்கி புதுருக் கிராமத்தை சேர்ந்த மகாதேவ் கோலி பழங்குடி சமூகத்தை சேர்ந்த பாங்க்ரேவின் குடும்பம், அகோலே தாலுகாவிலுள்ள ஆறு ஏக்கர் நிலத்தில் பல தலைமுறைகளாக விவசாயம் பார்த்து வருகிறது. ஆனால் மகாராஷ்டிராவின் ஆயிரக்கணக்கான பழங்குடிகளுக்கு, அவர்கள் விவசாயம் செய்யும் நிலம் அவர்களுக்கு சொந்தம் இல்லை.
“என் தாத்தாவின் காலம் தொடங்கி நெல்லும் கேழ்வரகும் விளைவித்து வருகிறோம்,” என்கிறார் அவர். “ஆனால் எங்களுக்கு எப்போதும் பாதுகாப்பு இருந்ததில்லை. எப்போது வேண்டுமானாலும் வெளியேற்றப்படுவோம்.”
2006ம் ஆண்டில் இந்திய அரசு பாதுகாப்பின்மையை சரிசெய்ய வன உரிமைகள் மசோதா கொண்டு வந்தது.. பல வருட போராட்டத்துக்கு பிறகு மசோதா சட்டமாகியது. பல தலைமுறைகளாக இப்பகுதிகளில் வாழ்ந்து வரும் மக்களிடமும் பட்டியல் பழங்குடிகளிடமும் வனம் மற்றும் அவற்றின் வளங்களின் உரிமையையும் அளிக்க இச்சட்டம் வழிவகை செய்கிறது. நில உரிமை குறித்த கோரலை ஊர்சபைகள் எழுப்பினால், துணை டிவிஷினல் மற்றும் மாவட்ட கமிட்டிகள் அதை சரிபார்த்து வனத்தில் வாழ்பவர்களின் உரிமைகளை இச்சட்டப்படி உறுதி செய்ய வேண்டும்.
ஆனால் சட்ட அமலாக்கம் களத்தில் சரியில்லை.






