மேற்கு வங்கத்தின் பிர்பம் மாவட்டத்தில் உள்ள தாராபித் ரயில் நிலையத்தில் இறங்கி கிராண்ட் டிரங்க் சாலையில் சென்றால், அதன் வழி முழுவதும் தூசி நிறைந்துள்ளது. பாறாங்கற்களை ஏற்றிச் செல்லும் ராட்சத லாரிகள் அந்தச் சாலைகள் முழுவதும் தூசு மற்றும் புகை மூட்டத்தை ஏற்படுத்துகிறது. அந்தத் தூசியில் உங்களால் எதையும் பார்க்க முடியாது. அதன் துகள்கள் உங்கள் மூக்கு, கண்கள் மற்றும் வாயில் நுழையாமல் இருக்க, உங்கள் முகத்தை நீங்கள் மூடி மறைக்க வேண்டும்.
பிர்பம்மின் மல்லர்பூர் கல் குவாரி பகுதியில் உள்ள காரியா என்ற ஆதிவாசி கிராமத்திற்குச் சென்றோம். உத்னாவ் என்ற பெயருள்ள ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் அங்குள்ள ஆதிவாசிக் குழந்தைகளுக்கு அவர்களின் தாய் மொழியில் ஆரம்பக் கல்வியைக் கற்பித்துக் கொண்டிருந்தது. அங்குள்ள கல் குவாரிகள் மற்றும் நொறுக்கும் ஆலைகளில் வேலை செய்யும் ஊழியர்களிடம் நான் பேச விரும்பினேன்.
காரியாவில் காசிராம் ஹெம்ப்ரோம் என்பவரைச் சந்தித்தேன். அவர் பாரத் ஜகாத் மஜ்ஹி மண்டுவா என்ற சந்தால் கிராம மற்றும் பகுதித் தலைவர்களின் கூட்டமைப்பில் பணியாற்றும் ஒரு சமூகச் சேவகர் ஆவார். அவர் எனது பயணத்தில் வழிகாட்டியாக இருந்தார். லிப்பிடி கிராமத்திற்குச் செல்லும் வழியில் தனியாக நடந்து சென்ற ஒரு வயதான பெண்ணைப் பார்த்தோம். கருமையான தோலும், சுருளான நரைத்த தலைமுடியும், வெறும் காலுடனும், முன்னம் பற்கள் இல்லாமலும் அவர் தோற்றம் அளித்தார். ஒரு வெள்ளை நிறப் புடவையும் அதன் மீது சிவப்புக் கம்பளியும் போட்டிருந்தார். ஜார்க்கண்ட்டின் எல்லைப் பகுதியில் அவர் தனியாக வாழ்கிறார். அவரது மூதாதையர் நிலத்தை ஒரு குவாரி உரிமையாளருக்குச் சில ரூபாய்க்குக் கொடுத்த பிறகு அவரின் கணவரும் மகன்களும் அவரை விட்டுச் சென்றதாகச் சொல்கிறார். தனது வீட்டையும் இழக்கும் சூழலில் இப்போது அவர் உள்ளார். விரிவடைந்து கொண்டே செல்லும் அந்தக் குவாரி அவரது குடிசையையும் எப்போது வேண்டுமானாலும் விழுங்கக்கூடும். இப்போது தனது வாழ்வாதாரத்திற்கு ஒரு கல் நொறுக்கும் ஆலையில் வேலை செய்கிறார் அவர். அங்கு லாரிகளில் வரும் பாறைகளை இறக்கி வைத்து அவற்றைச் சுத்தியலால் துண்டுகளாக உடைக்கும் பணியில் ஈடுபடுகிறார்.
கல் குவாரி தொழிற்சாலைகளுக்கு எதிராக மக்களை ஒருங்கிணைக்கும் பணியில் காசிராம் ஈடுபட்டுள்ளார். குவாரி உரிமையாளர்களுக்கு எதிராக மகன்களைச் செயல்பட சொல்லுமாறு அந்தப் பெண்ணிடம் அவர் கேட்டுக்கொண்டார். ஆனால், தனித்துவிடப்பட்ட அந்தப் பெண்ணால் எவருக்கும் உத்தரவிட முடியாது; எனவே அவரே செல்கிறார்.








