“எங்கள் சமூகத்தை சேர்ந்தவர்களில் யாராவது பராரா (காய வைக்க பயன்படும் தட்டு) அல்லது சூபா (சலிப்பான்) போன்றவற்றை மூங்கிலில் செய்ய விரும்பினால், பணமாகவும் தானியங்களாகவும் இன்னொரு குழுவுக்கு அவர்கள் அபராதம் செலுத்த வேண்டும்.” பைகா பழங்குடி சமூகத்தின் உட்பிரிவுகளான பிஞ்ச்வார், நகார், நரோதியா, பரோதியா, ராய் மைனா, கத் மைனா போன்றவற்றை சார்ந்த மக்கள் பின்பற்றும் சமூகவிதிகளை மங்காலி பாய் விவரிக்கிறார். மத்தியப் பிரதேசத்தின் பைகாக்கள், அதிகம் பாதிக்கத்தக்க பழங்குடி குழுவாக வரையறுக்கப்பட்ட சமூகம். “ஒவ்வொரு சமூகமும் மூங்கிலில் இருந்து ஒரு பொருளை தயாரிக்கிறது.”
பிஞ்ச்வார் பைகா பழங்குடியான அவர், 10-12 பழங்குடி குடும்பங்கள் வசிக்கும் பாலகாட் மாவட்ட நடா கிராமத்தின் பண்டா பகுதியில் வசிக்கிறார். அது ஒரு வெள்ளிக்கிழமை காலை. பிறருடன் சேர்ந்து மங்காலி பாய், மால்தார் கிராமத்தருகே இருக்கும் காட்டுக்கு மூங்கில் சேகரிக்க செல்கிறார். வழக்கமாக அதிகாலை 4 மணிக்கு செல்வார்கள். அன்று கொஞ்சம் தாமதம். நான் வருவதற்காக காத்திருந்தார்கள். ஆனாலும் சூரிய உதயத்துக்கு முன்பே கிளம்பிவிட்டார்கள்.
போகும்போது அவர்கள் உணவு பாத்திரங்களை ஆற்றங்கரையின் காய்ந்த மணலில் புதைத்துவிட்டு, ஒரு நீர் குடுவை மற்றும் கோடரியை ஒவ்வொருவரும் சுமந்து கொண்டு செல்கின்றனர். “சுமையை குறைத்து செல்வதற்கான வழி இது,” என்கிறார் மங்காலி பாய். நண்பகல் தாண்டிய பிறகு அவர்கள் இதே 8-10 கிலோமீட்டர் தூரத்தை வீடு திரும்பும்போது நடக்க வேண்டும். தலையில் 25 கிலோ இருக்கும் மூங்கிலை மூன்று அல்லது நான்கு கட்டுகளாக சுமந்து செல்வார்கள்.






































