"நீ உன் படிப்பில் முழு மனதுடன் ஈடுபட்டால், உன் சமூகத்தில் உள்ள மற்ற குழந்தைகளுக்கு நீ ஒரு உத்வேகமாக இருக்க முடியும்."
நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது, ஜிதேந்திர சர்மா சார் வகுப்பில் உள்ள அனைவரின் முன்பும் என்னைப் பார்த்து சொன்ன வார்த்தைகள் இது. பதிலுக்கு நெகிழ்ச்சியில் என்னால் ஒரு வார்த்தைகூடப் பேச முடியவில்லை. ஒரு முசஹர் சிறுவனான, என் மீது ஒருவர் இவ்வளவு நம்பிக்கை வைத்தது அதுவே முதல் முறை. நான் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோதும் அவருடைய வார்த்தைகள் என் மனதில் ஒலித்துக்கொண்டிருந்தன. "நீ ஒரு உத்வேகமாக இருக்க முடியும்..." என்னைப்பற்றி நான் அப்படி ஒருபோதும் நினைத்ததில்லை.
அன்றுதான் முதல் முறையாக, என் கல்வி, எனக்கானது மட்டும் அல்ல என்பதை நான் புரிந்துகொண்டேன். அது என்னைச் சுற்றியுள்ள மற்றவர்களுக்கும் படிப்பைத் தொடர தைரியம் அளிக்கக்கூடும். அதன் பிறகு நான் இன்னும் கடுமையாக உழைக்கத் தொடங்கினேன். சூழ்நிலைகள் எனக்கு எதிராகத் திரும்பிய ஒவ்வொரு முறையும், என் உறுதியை நிலைநிறுத்த சர்மா சாரின் வார்த்தைகளை நான் பற்றிக்கொண்டேன். ஓர் ஆசிரியரின் வார்த்தை எவ்வளவு மதிப்பு மிக்கதாகிறது! அது எவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது! ஷர்மா சாருக்கு கணிதம் கற்பிக்க தெரிந்ததோடு, தன் மாணவர்களின் மறைந்திருக்கும் திறமையையும் கண்டறிய முடிந்தது.
ஒரு நல்ல ஆசிரியர் புத்தகங்களைப் படிக்க மட்டும் கற்றுக் கொடுப்பதில்லை, உங்கள் கனவுகளைப் படிக்கவும் கற்றுக் கொடுக்கிறார்.
நான் உத்தரப் பிரதேசம், மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள மஜாவா கிராமத்தைச் சேர்ந்த ஆஷிஷ் நந்த். வயது 25. நாங்கள் முசஹர்கள். மக்கள் எங்கள் சமூகம் பற்றி பல விஷயங்களைக் கேள்விப்படுகிறார்கள். ஆனால் எங்களைப் புரிந்துகொள்வதில்லை. முசஹர் என்ற வார்த்தையே அவர்களின் மனதில் வறுமை, உடல் உழைப்பு மற்றும் பற்றாக்குறை போன்ற பிம்பங்களை உருவாக்குகிறது. அதிலும் ஓரளவு உண்மை இருக்கிறது. தலைமுறைகளாக நாங்கள் சமூகத்தில் மிகவும் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்ட மக்களில் ஒருவராக இருந்து வருகிறோம். உத்தரப் பிரதேசத்தில் எங்களை பட்டியல் சாதிப் பட்டியலில் சேர்த்தார்கள். எங்கள் முன்னோர்களுக்கும் நிலம் இல்லை. நிலையான வேலையும் வருமானமும் இல்லை. நாங்கள் தலித்துகள். கல்வி என்பது எங்கள் உரிமையாக இருந்ததில்லை. கிராமத்து ஏழை பிராமணர்களுக்கு இருந்தது போல, அது எங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்கவில்லை.










