லதாபாய்க்கு வார விடுமுறை கூட வழங்கப்படுவதில்லை. ஒவ்வொரு நாளும் அவர் வேலை செய்கிறார். உடல்நலம் குன்றி விடுப்பு எடுத்தால் கூட ஒரு நாளுக்கு ரூ.500 சம்பளத்தில் இருந்து ஒப்பந்த நிறுவனத்தால் பிடித்தம் செய்யப்படும்.
லத்தூர் நகரில் சிறந்த குப்பை சேகரிப்பாளராக லதாபாய் விருது பெற்றுள்ளார்.
“லத்தூர் நகரில் நான் மட்டுமே பெண் ஓட்டுநர். 2011-ஆம் ஆண்டு லத்தூர் திருவிழாவின்போது எனக்கு ஒதுக்கப்பட்ட குடியிருப்புப் பகுதிகளை தூய்மையாக வைத்துள்ளதாகக் கூறி, எங்கள் எம்.எல்.ஏ. அமித் தேஷ்முக்கிடமிருந்து லத்தூர் பூஷன் விருது பெற்றேன்,” என்றார் அவர்.
“எனக்கு ஒதுக்கப்பட்ட மண்டலத்தில் ஈரமான, காய்ந்த குப்பைகள் எதுவும் இல்லை என்பதை நகராட்சி நிர்வாக அதிகாரிகள் சோதனையில் கண்டறிந்தனர். அமைச்சர்கள் மற்றும் பிரபலங்கள் முன்னிலையில், பெருங்கூட்டத்திற்கு நடுவே இவ்விருது பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. எனது போராட்டத்திற்கு அங்கீகாரம் கிடைத்துவிடுமென கருதினேன். ஆனால் அது ஒரு நாள் நிகழ்வுதான் என யோசித்திருக்கவில்லை,” என்கிறார் அவர்.
மகாராஷ்டிராவின் லத்தூர் நகரைச் சேர்ந்த 40 வயது லதாபாய் ரசல் பேசுகையில், “2002-ஆம் ஆண்டு முதல் லத்தூரில் நான் குப்பை சேகரித்து வருகிறேன்,” என்கிறார். அந்த ஆண்டு தான் அவரது கணவர் இறந்தார். அதற்கு ஏழு ஆண்டுகளுக்கு முன் 15 வயதிலேயே அவருக்கு திருமணம் ஆகிவிட்டது. தனது ஐந்து பிள்ளைகளை வளர்க்கவும், வாழ்வாதாரத்திற்காகவும் அவர் தூய்மைப் பணியாளர் வேலையில் சேர்ந்தார்.
















