ஆண்களுக்கும் பெண்களுக்கும் பச்சை குத்துவது வித்தியாசங்களை கொண்டது. பூப்பெய்துதல், மணம் முடித்தல் என வாழ்வின் பல கட்டங்களில் பெண்கள் பச்சை குத்துகின்றனர். சிலரது பச்சைகள், குடும்பத்தின் ஆண் உறுப்பினர்களின் சாதனைகளை குறிக்கவும் குத்தப்பட்டிருக்கிறது.
“கொன்யாக் பெண்ணின் வாழ்க்கை பல மாற்றங்களை கொண்டது. தந்தையின் குலத்தில் பிறந்து, இன்னொரு ஆணை மணக்கிறாள். ஆனால், திருமணத்துக்கு முன் அவள் குத்திய பச்சைதான் வாழ்க்கை முழுக்கவும் மரணத்துக்கு பின்னும் தொடர்கிறது. அந்த ஒரு அடையாளம்தான் அவளுக்கு மாறாமல், பூர்விகத்தை அவளுக்கு அடையாளப்படுத்துகிறது,” என்கிறார் அமோ கொன்யாக்.
மான் பகுதியில் வாழும் அவர், தாத்தா-பாட்டியிடம் கண்ட பச்சை வடிவங்களை நினைவுகூருகிறார். “ஒரு குழந்தையாக, பச்சை குத்துவது குறித்த கதைகளை நான் கேட்டிருக்கிறேன். எப்படி பச்சை குத்தப்படும், எவ்வளவு வலிக்கும், பச்சை குத்தப்பட்ட பிறகு எத்தனை பெருமை இருக்கும் என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன். வாய்மொழிக் கதைகளாக இவை யாவும் மதிப்போடும் மரியாதையொடும் அடுத்த தலைமுறைகளுக்கு கடத்தப்பட்டிருக்கிறது. என்னை பொறுத்தவரை, குத்தப்படும் பச்சைகள் யாவும் தோலில் மட்டுமின்றி குறிப்பிட்ட மனிதரின் இருப்பிலேயே வரையப்படும் நினைவின் வரைபடம் ஆகும்,” என்கிறார் 32 வயது ஆய்வாளரான அவர்.
எதிரிகளின் தலைகளை கொய்யும் வீரர்களாக இருந்தவர்கள் கொன்யாக்குகள் என்பதால், போர் வெற்றியை குறிக்கும் வகையில் அவர்களின் தோலில் பச்சை குத்தப்பட்டிருக்கிறது. இதில் செலுத்தப்பட்ட கவனத்தால், கொன்யாக் பச்சைக்குத்துதல் பற்றிய ஆய்வுகளும் கட்டுரைகளும் பெண்களை புறக்கணித்திருக்கின்றன என்கிறார் பாட்டியால் பச்சை குத்தும் கதைகள் சொல்லப்பட்ட விதத்தை நினைவுகூரும் அமோ. “இதை செய்வது எத்தனை வலி மிகுந்தது என்பது அவருக்கு தெரியும். ரத்தம் வந்து, வீங்கியும் கூட அவர் பச்சை குத்திய பிறகு பெருமையாக உணர்வார்.”
அதே கிராமத்தில் எழுபது வயதுகளில் இருக்கும் ங்கோன்ஃபே என்பவரும் அக்கா மற்றும் உறவினர்களிடமிருந்து பச்சை குத்தும் கலையை கற்றுக் கொண்டார். அவர்கள் தம் தாய்மார்களிடமிருந்து கற்றிருந்தனர். எனினும் அவருக்கு பச்சை குத்தும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஏனெனில் முதல் ‘ராணி’ என குறிப்பிடப்படும் மனைவிக்கு மட்டும்தான் அந்த வாய்ப்பு உண்டு. ராணி பச்சைக்குத்த ங்கோன்ஃபே உதவுவார். முட்களை சேகரிப்பது, பச்சை குத்தும் கலைஞருக்கு உணவு சமைப்பது, பச்சை குத்தப்படும் நபரை அசையாமல் பிடித்துக் கொள்வது போன்ற உதவிகள். ங்கோன்ஃபே குறிப்பிடும்போது பச்சை குத்தும் வலி அவரின் முகத்தில் தெரிகிறது. பிறகு பழைய நினைவு என புரிந்து வெடித்து சிரிக்கிறார்.
அவரை சந்திக்க சென்றிருந்தபோது மூங்கில் குடிசையில் அமர்ந்திருந்தார். மென்மையாக பேசிய அவரின் குரலை, விழா மைதானத்தில் இருந்து வரும் உற்சாக குரல்கள் அவ்வப்போது கேட்க விடாமல் செய்தன. புகைப்படம் எடுக்கலாமா எனக் கேட்டதும் சந்தோஷமாக சென்று பாரம்பரிய உடை மற்றும் அணிகலன் அணிந்து கொண்டு வந்தார்.