ஒவ்வொரு நாள் காலையும் அகிஃப் எஸ்.கே. ஹேஸ்டிங்ஸ் பாலத்துக்கடியில் இருக்கும் ஒரு குடிசையிலிருந்து கிளம்பி, கொல்கத்தாவின் பிரபலமான சுற்றுலா தளமான விக்டோரியா மெமோரியலுக்கு சென்று விடுகிறார். போகும் வழியில் ராணி மற்றும் பிஜிலியையும் கூட்டிக் கொள்கிறார்.
இரு வெள்ளை குதிரைகள்தான் அவரின் வாழ்வாதாரத்துக்கு அடிப்படை. “நான் குதிரை வண்டி ஓட்டுகிறேன்,” என்கிறார் அகிஃப். ஹேஸ்டிங்க்ஸுக்கு அருகே நிறுத்தி வைத்திருக்கும் விலங்குகளை காலை 10 மணிக்கு விக்டோரியாவுக்கு - மத்திய கொல்கத்தாவிலிருக்கும் பளிங்குக் கட்டிடத்தை சுற்றி இருக்கும் பகுதிக்கும் திறந்த வெளிக்கும் சொல்லப்படும் உள்ளூர் பெயர் - கொண்டு வருகிறார். பிரிட்டிஷ் ராணி விக்டோரியாவின் நினைவில் கட்டப்பட்ட அக்கட்டடம், 1921ம் ஆண்டில் பொது மக்களின் பயன்பாட்டுக்கு அளிக்கப்பட்டது.
அகிஃப் அன்றாடம் வாடகைக்கு எடுக்கும் வண்டி, விக்டோரியா மெமோரியலின் குயின்’ஸ் வே பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 10 வண்டிகள் நிறுத்தப்பட்டிருக்கும் வரிசையில் தன் வண்டியை சுட்டிக்காட்டி, அவர் சொல்கிறார், “தங்க நிறத்தில் இருப்பதுதான் என்னுடையது.”
தெருவை தாண்டி விக்டோரிய மெமோரியலின் கேட்டருகே ஒரு சிறு கூட்டம் ஏற்கனவே கூடியிருக்கிறது. “அந்த காலத்தில் இங்கு அரசர்கள் வாழ்ந்தனர். அவர்கள் குதிரை வண்டிகளில்தான்ச் செல்வார்கள். இப்போது விக்டோரியாவுக்கு வருபவர்கள், அந்த உணர்வை பெற விரும்புகிறார்கள்,” என்கிறார் 2017ம் ஆண்டில் இந்த வேலையை செய்யத் தொடங்கிய அவர். மேலும் அவர், “விக்டோரியா (மெமோரியல்) இருக்கும் வரை, குதிரை வண்டிகள் இருக்கும்.” போலவே அவரை போன்ற குதிரை வண்டி ஓட்டுபவர்களின் வேலைகளும் இருக்கும். தற்போது இப்பகுதியில் 50 வண்டிகள் இயங்குகின்றன.
குளிர்காலம் வந்துவிட்டது. கொல்கத்தா வெளிப்புறத்தில் புழங்க தயாராகி விட்டது. அகிஃப், மாலை நேரங்களில் பிசியாகி விடுகிறார். இங்கு சீசன் நவம்பரில் தொடங்கி பிப்ரவரி வரை இருக்குமென கூறுகிறார். அதற்குப் பிறகு கோடை வந்துவிடும். கடும் வெயில் இருக்கும். குறைந்த எண்ணிக்கையில்தான் மக்கள் குதிரை வண்டிகளில் பயணிக்க வருவார்கள்.











