“ஒவ்வொரு அங்காமிக்கும் கோப்பி நெய்வது தெரிந்திருக்க வேண்டும்,” என்கிறார் கொனோமா கிராமத்தை சேர்ந்த 39 வயது பெலேசலீ குவோட்சு. சுசா (மூங்கில்) மற்றும் துன்யே (பிரம்பு) ஆகியவற்றை கொண்டு செய்யப்படும் அங்காமி கூடைகள் விறகு, அரிசி, அறுவடை தானியம் மற்றும் விழாப் பொருட்கள் போன்றவற்றை நிரப்ப பயன்படுகிறது. “நம் பாரம்பரியத்தில் அது பெரும் பங்கு வகித்திருக்கிறது. இதை எப்போதும் நாம் பேணி காக்க வேண்டும்,” என்கிறார் அவர்.
ஒரு காலத்தில் மக்களின் வாழ்வுகளில் முக்கியமான அங்கமாக வகித்த கோப்பி நெசவு இன்று கொனோமாவில் 15 குடும்பங்களில் மட்டும்தான் செய்யப்படுகிறது. அதிலும் முதியவர்கள்தான் இதை செய்கின்றனர். பெலேசலீ விதிவிலக்கு.
ஐம்பது வயதுகளில் இருக்கும் கேபே தொடோவின் கைகள் தொழில் நேர்த்தியுடன் மூங்கில் இழைகளை மூங்கில் தூண்கள், பிரம்பு மற்றும் கட்டைகளால் ஒரு பகுதி மூடப்பட்டு மெல்லிய ஒளி வரும் தெர்ஹு என்கிற இடத்தில் அமர்ந்து செய்கிறார். நண்பகல் வெயிலை வெட்டி தெர்ஹு நிழலை தருகிறது.
“நெசவாளரின் வீட்டிலிருந்து வருபவன் நான். என் ஒன்று விட்ட சகோதர்களுக்கும் எனக்கும் கோப்பி நெசவு கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது,” என்கிறார் மூங்கில் இழைகளை நெய்தபடி.
நாகாலாந்தில் அங்கீகரிக்கப்பட்ட 17 பழங்குடி சமூகங்களில் அங்காமியும் ஒன்று. 1800-களிலிருந்து பிரிட்டிஷுக்கு எதிரான போராட்டங்களுக்கான வரலாற்று மையமாக திகழ்ந்த ஊர் கொனோமா. மாநிலத் தலைநகரான கொகிமாவுக்கு மேற்கில் 20 கிலோமீட்டர் தொலைவில் அங்காமி கிராமம் இருக்கிறது. கூட்டுறவு வாழ்வியலுக்கு பெயர்பெற்ற அச்சமூகத்தினர் வேட்டை மற்றும் மரம் வெட்டுவது ஆகியவற்றுக்கு தடை விதித்திருக்கின்றனர்.
மலையில் 20 சதுர கிலோமீட்டருக்கு பரந்திருக்கும் கிராமத்தை கற்சாலைகளும் நெல் வயல்களும் வீடுகளுக்கு வெளியே அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் விறகுகளும் அடையாளம் காட்டுகின்றன.
400 அங்காமி குடும்பங்கள் இருக்கும் ஊரில் 1,943 பேர் (2011 கணக்கெடுப்பு) வசிக்கின்றனர். மாடி நெல் விவசாயமும் காட்டு சாகுபடியும் காட்டுற்பத்தியும் இவர்களின் வாழ்வாதாரங்கள். சுற்றியிருக்கும் காடுகளுக்கு கொனோமா இயற்கை பாதுகாப்பு மற்றும் ட்ராகோபான் சரணாலயம் வழியாக இவர்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர்.


















