மேற்கு வங்காளத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள தனது பாபர் பாரி (தந்தையின் வீடு) பற்றிய அர்ஜினா பீபியின் இனிமையான நினைவுகள், அவரது தாய் மற்றும் பாட்டி பற்றியவை. "என் பாட்டியின் குறுக்கு அடுக்கு தையல்களும், பூத்தையல் பூக்களால் நிரப்பும் பாணியும், என் காந்தா வேலையில் பிரதிபலிக்கிறது" என்று தனது பாரம்பரிய கைத்தையல் பற்றி கூறுகிறார். "எனக்குத் தெரிந்ததெல்லாம், அவர்கள் தைப்பதை கவனித்து நான் கற்றுக்கொண்டது. அவர்கள் பாணியில்தான் நான் இன்னும் தைக்கிறேன்," என்கிறார் அர்ஜினா.
மூன்று தசாப்தங்களாக காந்தா கைவினைஞராக இருக்கும் அர்ஜினா, இந்தத் திறன் தனது குடும்ப செலவுக்கு கணிசமாக பங்களிக்க உதவுவதாக கூறுகிறார். தற்போது நாற்பது வயதைக் கடந்துள்ள இவர், ஆறு காந்தா கைவினைஞர்களைக் கொண்ட ஒரு முழு பெண்கள் குழுவை வழிநடத்துகிறார். இவர்கள் உள்ளூர் வர்த்தகர்களுக்கு தைத்து கொடுக்கின்றனர்.
மேற்கு வங்காளத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பராசத் நகரின் புறநகரில், வெயில் கொளுத்தும் ஜூலை மாத மதியம் ஒன்றில், நாங்கள் அர்ஜினாவை அவரது பணியிடத்தில் சந்தித்தோம். அவரது பக்கத்து வீட்டுக்காரரும், சக ஊழியருமான நூராநஹர் பீபியின் முன்னறையில் அமைக்கப்பட்ட ஒரு தற்காலிக கர்கானா (பட்டறை) முழுவதும் நூல்கள், கத்தரிக்கோல் மற்றும் டிரேசிங் பேப்பர்களின் பெட்டிகள் சிதறிக்கிடக்கின்றன. பெண்கள் காந்தாவிற்கு ஏற்ப தொடர் தையலால் துணிகளில் எம்பிராய்டரி செய்கிறார்கள்.
“என் கணவர், காந்தா பொருட்களின் விநியோகஸ்தராக பணிபுரிகிறார்,” என்கிறார் 35 வயதான நூராநஹர். “நான் சில எம்பிராய்டரி வேலைகளை செய்து அவருக்கு உதவுகிறேன்.” அவரது கணவர் 43 வயதான முகமது ஜலாலுதீன் மற்றும் அவரது குடும்பத்தினர் மூன்று தலைமுறைகளாக காந்தா வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனர். "அவர் ஒரு திறமையான காந்தா மற்றும் எம்பிராய்டரி கைவினைஞர்" என்று நூராநஹர் ஒரு சிறிய புன்னகையுடன் கூறுகிறார்.
அருகில் இருக்கும் ஜலாலுதீனை கிண்டல் செய்து, அர்ஜினா, “மேயே’ரா பேஷி பாலோ பனாயே, கியேனோ கி அம்ரா மோன் தியே ஷிகேச்சி, அர் மோன் தியே காந்தா பனாயி. செலே’ரா தோ ஈ ஷோப் கே காஜ் மெனே சோலே [கைவினையுடன் உணர்ச்சிபூர்வமான தொடர்பு இருப்பதால் பெண்கள் சிறந்த காந்தாக்களை தைக்கிறார்கள். ஆனால் ஆண்கள் அதை ஒரு தொழிலாக மட்டுமே பார்க்கிறார்கள்].”
















