இரண்டு பேர் மலை வழியாக எதிர்ப்படும் முட்செடிகளை வெட்டியபடி நாகமுன் குன்ஃபைஜாங்கிலுள்ள அவர்களின் நிலங்களை நோக்கி செல்கின்றனர். சிறு கிராமமான அங்கு 40 குகி-ஜோ பழங்குடி குடும்பங்கள் இருக்கின்றன. மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் அந்த கிராமம் இருக்கிறது. 2023ம் ஆண்டின் அந்த செப்டம்பர் நாளில் வானம் மேகமூட்டமாக இருந்தது. சுற்றியிருந்த மலைப்பரப்பு முழுக்க காட்டுப் புதர்கள் நிரம்பியிருந்தன.
ஆனால் சில வருடங்களுக்கு முன் இம்மலைகளை கசாகசா செடிகளின் (Papaver somniferum) பளீர் வெள்ளை, இளம் ஊதா மற்றும் இளஞ்சிவப்பு பூக்கள் போர்த்தியிருந்தன.
“1990களின் தொடக்கத்தில் நான் கஞ்சா ( Cannabis sativa ) செடி வளர்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் அந்த காலத்தில் அதில் அதிகம் பணம் வரவில்லை,” என்கிறார் பெளலால். பயணித்துக் கொண்டிருக்கும் இருவரில் ஒருவர் அவர். “2000மாம் வருடங்களின் தொடக்கத்தில் மக்கள் கானி (கசாகசா) செடிகளை இம்மலைகளில் வளர்க்கத் தொடங்கினர். நானும் வளர்த்தேன்,” என்னும் அவர், “சில வருடங்களுக்கு முன் அது தடை செய்யப்படும் வரை,” என்கிறார்.
பெளலால் குறிப்பிடுவது 2020-ம் ஆண்டின் குளிர்காலத்தை. நாகமுன் குன்ஃபைஜாங்கின் தலைவரான தாங்போய் கிப்கென், கிராமத்திலிருக்கும் பயிர்களை அழிக்கச் சொன்னார். விவசாயிகளையும் கசாகசா விவசாயத்தை முற்றாக கைவிடும்படி கூறினார். அவரின் முடிவு, மாநிலத்தில் ஆட்சி செய்து கொண்டிருந்த பாஜக அரசாங்கம் முழு வீச்சில் முன்னெடுத்த ‘போதைப் பொருட்களுக்கு எதிரான போர்’ பிரசாரத்தின் விளைவில்தான் எடுக்கப்பட்டிருந்தது.
போதை கொடுக்கக் கூடிய ஓபியம், கசாகசாச் செடியிலிருந்துதான் தயாரிக்கப்படுகிறது. அச்செடிகள் பிரதானமாக மணிப்பூரின் மலை மாவட்டங்களான சுராசந்த்பூர், உக்ருல், காம்ஜாங், செனாபதி, தமேங்லாங், சாந்தெல், தேங்க்னோபல் மற்றும் காங்போங்பி போன்ற இடங்களில் விளைவிக்கப்படுகிறது. காங்போக்பியில் வாழும் பெரும்பாலானோர் குகி-ஜோ பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள்.
ஐந்து வருடங்களுக்கு முன் நவம்பர் 2018-ல்தான் முதலமைச்சர் பைரன் சிங்கின் தலைமையிலான பாஜக மாநில அரசாங்கம் ‘போதைப்பொருட்களுக்கு எதிரான போர்’ அறிவித்தது. மலை மாவட்டங்களிலிருந்து ஊர்த் தலைவர்கள் மற்றும் தேவாலயங்கள், தங்களின் பகுதிகளில் கசாகசா விவசாயத்தை நிறுத்த வேண்டும் என சிங் கேட்டுக் கொண்டார்.









