சோளம் வறுக்கப்படும் மணம் மற்றும் சமையல் நெருப்பின் புகை காற்றை நிரப்பியிருக்கிறது. ஹுர்தா கொண்டாட்டம் நடக்கிறது. புதிதாய் அறுவடை செய்யப்பட்டிருக்கும் ஹுர்தா எனப்படும் சோளம் பிரபலமான உணவு. விவசாயிகள் தங்களின் பயிர்களை கொண்டு வந்து மராத்வடாவின் கிராமங்களிலும் டவுன்களிலும் கடைகள் அமைத்திருக்கின்றனர்.
“மக்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்,” என்கிறார் லோண்டியாசிவாடியை சேர்ந்த சோள விவசாயியான சூர்யாகாந்த் மைந்த். சோளத்தின் பெத்ரி மற்றும் மல்தண்டி வகைகளை, ஜால்னா மாவட்டத்தின் ஐந்து ஏக்கர் நிலத்தில் அவர் விளைவிக்கிறார். பயிர் பச்சையாக இருக்கும் டிசம்பர் மாதத்திலேயே பாதியையும் மிச்சத்தை பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் பயிர் முதிர்ந்த பிறகும் குடும்பம் அறுவடை செய்கிறது.
கவனமாக அறுவடை செய்யப்பட்ட சோளப் பயிருடன் (ஹுர்தா) மைந்த் ஜல்னா நகரத்துக்கு பயணிக்கிறார். 55 வயது விவசாயியான அவர், ஒவ்வொரு பருவத்திலும் 40 கிலோ பச்சை சோளத்தை கிலோ 150 ரூபாய் என்கிற விலையில் விற்கிறார்.
கடைகளில் ஹுர்தா தயாரித்தல் மெதுவான நுட்பமான முறை ஆகும். பெண்கள்தான் பெரும்பங்காற்றுவார்கள். பச்சை சோளக் கருதுகள் ஒரு குழியில் போட்டு வறுக்கப்படும். நீண்ட மரக் குச்சிகளை கொண்டு சோளக் கட்டுகள் திருப்பப்பட்டு, சமமாக வறுக்கப்படுகின்றன. நேரத்தில் கவனம் இருக்க வேண்டும். “சீக்கிரம் எடுத்தால், வேகாமல் இருக்கும். தாமதமாக எடுத்தால் கருகி விடும்,” என விளக்குகிறார் சத்ரபதி சம்பாஜிநகர் (முன்னால் அவுரங்கபாத்) மாவட்டத்தை சேர்ந்த 45 வயது விவசாயியான பிமா நானா தகானே.
வறுக்கப்பட்ட பிறகு, உமி போக தங்களின் உள்ளங்கைகளை தேய்த்துக் கொள்கின்றனர் பெண்கள். பிறகு சமையல் தொடங்குகிறது. “காலை முதல் மாலை வரை, பிற பெண்களுடன் நான் சமையலறையில் இருக்கிறேன்,” என்கிறார் சவிதா தகானே. “நிலத்தில் இருந்து வருவதை நேராக கொண்டு வந்து சமைத்துக் கொடுப்பதில் எங்களுக்கு பெருமை.”














