கத்கோலாப்பின் நறுமணம் கொண்ட வெள்ளை மற்றும் மஞ்சள் பூக்க்ளை நீளமான மாலையாக சந்திராமா பின்னிக் கொண்டிருக்கிறார். அவரின் மூன்று பெரிய தங்க மூக்கு வளையங்கள், கைகளில் இருக்கும் அழகிய பூக்களின் மஞ்சள் நிறத்தையும் ஏப்ரல் மாத மதிய வேளையின் மஞ்சள் நிற சூரியனையும் விஞ்சுவதாக இருக்கிறது. அவரும் கதாபா பழங்குடி சமூகத்தை சேர்ந்த இருபது பெண்களும் ஒடிசாவின் கொராபுட் மாவட்டத்தின் புத்பாண்டி கிராமத்துக்கு வெளியே இருக்கும் திறந்த வெளியில் மும்முரமாக மாலைகளை பின்னிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் அனைவரும் இரண்டு அல்லது மூன்று வளையங்களை மூக்கில் அணிந்திருக்கின்றனர்.
“வலப்பக்கத்தில் இருக்கும் இந்த மூக்கு வளையத்தை பேசரி என்றும் நடுவே உள்ளதை தொண்டி என்றும் இடதில் உள்ளதை நட்டோ என்றும் அழைக்கிறோம். ரொம்ப காலமாக இவற்றை நான் அணிந்து கொண்டிருக்கிறேன். இதை அணிந்தபடியே நான் பிறந்து கூட இருக்கலாம்,” எனச் சொல்லி 70 வயது சந்திராமா கதாபா சிரிக்கிறார். அவரின் தொண்டி சற்று மேலே நகர்ந்து, மூக்கிலிருந்து தொங்கும் தங்க மணிகள் மறைத்திருந்த உள் உதடை வெளிக்காட்டுகின்றன.
”முன்பு எங்களின் கதாபா பழங்குடி சமூகத்தில், குழந்தைகளாக இருக்கும்போதே பெண்களுக்கு மூன்று வளையங்களையும் மாட்டி விட்டு விடுவார்கள். ஆனால் இப்போது ஐந்து, பத்து வயதுக்கு பிறகுதான் மூக்கு குத்துகிறார்கள். இன்னும் பல சிறுமிகள் மூக்கு குத்த விரும்புவது கூட இல்லை,” என்கிறார் அவர். ஒவ்வொரு வரியை பேசும்போதும் அவரது விரல்கள் கடமை தவறாது, பூக்களை மாலையாக பின்னிக் கொண்டிருக்கின்றன. வேட்டை முடிந்து ஆண்கள் மாலை வரும்போது வரவேற்க அந்த மாலைகள் பயன்படும். இதை சைத்ர பர்வம் என்றும் சொல்வார்கள்.
இந்து நாட்காட்டியின் முதல் மாதமான சைத்ர பர்வத்தை குறிக்கும் வகையில் ஒடிசா மற்றும் ஜார்க்கண்ட் பகுதிகளில் வாழும் பழங்குடி சமூகங்கள் 14 நாள் விவசாய விழாவை கொண்டாடுகின்றனர். இந்த விழா கொண்டாடப்படும் ஏப்ரலின் மையப்பகுதி, விவசாய வேலை முடிந்து ஓய்வெடுக்கும் காலம் ஆகும். கோடை பாடல்கள் காற்றை நிரப்பும். பருவம் முடிந்து பழங்களும் பூக்களும் எங்கும் கிடைக்கும். கதாபா சமூகத்தை சேர்ந்த இளைய மற்றும் முதிய பெண்கள் ஆடி, பாடி, குடித்து கிராம தெய்வங்களுக்கு மாம்பழங்களை காணிக்கை ஆக்குகின்றனர். பிறகு வேட்டை முடித்து திரும்பும் ஆண்களை வரவேற்க மாலைகள் பின்னுகின்றனர்.








