துலேஸ்வரி பிறந்த தேதி ஜனவரி 1, 1963 என அவரது குடும்ப அட்டை சொல்கிறது. ஆனால் முதிர்ந்து கொண்டிருக்கும் சந்தால் பழங்குடியான அவரின் வயது இன்னும் அதிகம் இருக்கும். “100 வயது இருக்கலாம்,” என்கிறார் அவரின் கொள்ளுப் பேத்தியான 16 வயது பிரமிளா கிஸ்கு.
மேற்கு வங்க சாந்திநிகேதனில் இருக்கும் பகன்பராவிலுள்ள துலேஸ்வரியின் வீட்டுக்கு வெளியே நாம் அமர்ந்திருக்கிறோம். இங்கிருக்கும் சந்துகளில் தெருநாய்களும் வீட்டுக்கோழிகளும் அலைந்து கொண்டிருக்கின்றன. நாய்கள் சோம்பி கிடக்கின்றன. கோழிகள் தரையைக் கொத்திக் கொண்டு இருக்கின்றன.
“என் கொள்ளுப் பேத்தியின் பெயர் சாந்திநிகேதன்,” என்கிறார் துலேஸ்வரி. ஒட்ட வெட்டப்பட்டிருக்கும் தலைமுடியை விரலால் கோதியபடி அவர் புன்னகைக்கிறார்.
“பேன் இருந்தது,” என்கிறார் அவர். “பேன் பார்க்க யாருக்கு நேரம் இருக்கிறது? எனவே முடியை வெட்டிவிட்டேன்,” என புன்னகைக்கும் துலேஸ்வரி பிரமிளாவை சுட்டிக் காட்டுகிறார். “அன்றாடம் அவள் எனக்கு ஒரு தம்ளர் தேநீர் தயாரித்து, நகங்களை வெட்டி விடுவாள்,” என்கிறார் துலேஸ்வரி.








