அருகில் அணைந்து கொண்டிருக்கும் தணலை அமைதியாகப் பார்த்தபடி, "இந்த விருந்தை கேஸ் அடுப்பில் சமைக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால் கேஸ் பற்றாக்குறை காரணமாக, விறகிற்கு மாறிவிட்டேன். இதனால் எங்களுக்கு கிட்டத்தட்ட இரு மடங்கு செலவாகிறது," என்கிறார் ரியாஸ் அஹ்மத்.
50 வயதான ரியாஸ் அஹ்மத் அஞ்சாரி, ஒரு வஸா. அதாவது ஒரு பாரம்பரிய காஷ்மீரி சமையல்காரர். நண்பர் ஒருவரின் சகோதரியின் திருமணத்தில் அவர் தான் தலைமை வஸாவாக இருக்கிறார். தற்போது இவர் எதிர்பார்க்கப்படாத ஒரு புதிய சிக்கலுடன் போராடி வருகிறார்.
சுமார் 3,000 கிலோமீட்டர் தொலைவில் ஈரானில் நடக்கும் போர், காஷ்மீரில் திருமணங்களை சீர்குலைக்கிறது.
முன்பு, வீடு முழுவதும் உற்சாகமாக காணப்பட்டது. சிலர் பாரம்பரியப் பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தனர். சிலர் நடனமாடிக்கொண்டிருந்தனர். ஒரு சிலர் விருந்தினர்களை உபசரிப்பதில் மும்முரமாக இருந்தனர். வீடு முழுவதும் தொங்கவிடப்பட்டிருந்த மின்விளக்குச் சரங்கள், இரவுக்கு இதமான வண்ணங்களைத் தீட்டின.
வஸாக்கள் மற்றும் அவர்களின் கதைகள், தலைமுறைகள் கடந்து பின்பற்றப்படும் சமையல் குறிப்புகள் மீது எனக்கு எப்போதுமே ஒரு ஈர்ப்பு இருந்தது. அதனால், இரவு சுமார் 11 மணியளவில் அவர்கள் திருமண விருந்து சமைத்து முடித்ததும், அந்த சமையல்காரர்களுக்கு அருகில் நான் அமர்ந்து கொண்டேன்.
ஒவ்வொரு வஸாவும் மிகுந்த திறமை வாய்ந்தவர். ஒருவர், வியக்கத்தக்க துல்லியத்துடன் இறைச்சியை வெட்டுவதில் வல்லுநர் என்றால், மற்றொருவர், பொறுமையாக சமைப்பதில் உள்ள நேர நுட்பத்தை கணிக்கும் திறன் கொண்டவர். இன்னொருவரோ, பார்த்தவுடனே உணவில் என்ன சுவைக் குறைவு என்பதைத் துல்லியமாக அறிந்துகொள்ளும் அளவுக்கு மசாலாப் பொருட்கள் பற்றிய உள்ளுணர்வு கொண்டவர்.











