ட்ராக்டர்களுக்கு டீசல் வாங்க இரண்டு பெரிய பிளாஸ்டிக் கேன்களை மோட்டார்சைக்கிளில் இணைத்து டவுனுக்கு செல்கிறார் துக்காராம் மசல். ஏன் ட்ராக்டர்களை அவர் நேரடியாக எடுத்து செல்லவில்லை?
“எரிபொருளும் பணமும்தான் வீணாகும்,” என்கிறார் மசல். அதிகபட்சமாக ஒரு லிட்டருக்கு ஐந்து கிலோமீட்டர் ட்ராக்டர் செல்லும். ஆனால் “டீசலின் விலை தற்போது லிட்டருக்கு 100 ரூபாயாக இருக்கிறது.” மேலும் அவர் பல எரிபொருள் நிலையங்களை சுற்றி அலைய வேண்டியிருக்கும்.
எனவே டீசலை மிச்சம் பிடிக்கும் வேலை தொடங்கிவிட்டது.
“ஒவ்வொரு முறையும் கொஞ்சமாகதான் டீசல் எங்களுக்கு தருகிறார்கள்,” என்கிறார் 53 வயது விவசாயி. அவர் வசிக்கும் வக்வாத் கிராமம், மகாராஷ்டிராவில் பஞ்சம் பாதிக்கும் தாராஷிவ் மாவட்டத்திலுள்ள பூம் டவுனிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.
“ஒருநாள் வரையுமாவது தாக்குப்பிடிக்க தேவையான 20-25 லிட்டர் டீசலை வாங்க ஐந்து வெவ்வேறு பெட்ரோல் நிலையங்களுக்கு செல்கிறேன்,” என்கிறார். பூம் பகுதியை சுற்றி பல எரிபொருள் நிலையங்கள் இருக்கின்றன.
சில நாட்களில் மசல் 70-80 கிலோமீட்டர்களுக்கு டீசல் தேடி செல்வதுண்டு. “ஒவ்வொரு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு டீசல் கிடைத்தால் எனக்கு அதிர்ஷ்டம்தான்,” என்கிறார். சில நேரங்களில் எரிபொருள் நிலையங்களில் பிளாஸ்டிக் கேன்களில் டீசல் கொடுக்க மறுக்கப்படும். ட்ராக்டர்களை கொண்டு வந்து நிரப்பிக் கொள்ளும்படி சொல்லப்படுவதும் உண்டு.











