சத்திரபதி சம்பாஜிநகரை சேர்ந்த போக்குவரத்து நிறுவனத்தை சேர்ந்தவரும் இருபது ஆண்டுகளாக லாரி ஓட்டுநராக பணியாற்றியவருமான 50 வயது சுபாஷ் பிக்காட் 2019 டிசம்பரில் நெடுஞ்சாலைக்கு வாகனத்தை ஓட்டி சென்றார்.
“இரு நண்பர்களும் நானும் சொந்தமாக ஒரு போக்குவரத்து நிறுவனத்தைத் தொடங்கினோம். மூன்று லாரிகளையும் கண்டெயினர்களையும் வாங்கினோம். அனைவரும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள். லாரிகள் ஓட்டிய அனுபவம் கொண்டவர்கள். புனேவை சேர்ந்த ஒரு நண்பர் நாங்கள் வாங்கிய கடனுக்கு உத்தரவாதம் கொடுத்து கையெழுத்திட்டார்.”
ஓட்டுநர் உரிமையாளராக இருக்கும் நிறுவனத்தின் பயணம் அப்போதுதான் தொடங்கியது. பிக்காடுக்கும் அவரின் பங்குதாரர்களுக்கு மட்டுமின்றி, சர்னி சங்க்வி கிராமத்தை சேர்ந்த 80 இளைஞர்களும் அதில் பங்கு பெற்றனர். 1,460 பேர் இருக்கும் ஊரில், நான்கில் ஒரு குடும்பம் லாரி தொழிலில் இருந்தது. சர்னி சங்க்வி என்பது பீட் மாவட்ட கைஜ் தாலுகாவின் பஞ்சம் பீடித்த பகுதியில் இருக்கும் இரட்டை கிராமங்கள்.
2025ம் ஆண்டில் சர்னி சங்க்வி, லாரிகள் மற்றும் கண்டெயினர்களின் கிராமமாக மாறியது. 80 பேருக்கு சொந்தமாக நானூறு லாரிகளும் கண்டெயினர்களும் இருக்கின்றன. வணிகம் வேகமாக நிலையாக வளர்ந்தது. நாட்டின் பெரும் போக்குவரத்து நிறுவனங்கள் சில, தம் வேலைகளை அவர்களுக்கு அளிக்கவும் செய்தன. அடுத்தவர் கொடுத்த கடன் உத்தரவாதங்களை கொண்டு அனைவரும் வெற்றிகளை எட்டினர். ஊர்த் தலைவர் சுனில் கெதார் சொல்கையில், “வயல்களில் எல்லா லாரிகளையும் நிறுத்தி நாங்கள் தீபாவளிக்கு பூஜை செய்தோம்,” என்கிறார்.
லாரி-கண்டெயினர்தான் ஊரின் புது தெய்வம்.
ஆனால் இன்று, பல லாரிகளும் கண்டெயினர்களும் ஆங்காங்கே நின்றிருக்கின்றன. சில மட்டும்தான் ஊரில் இருக்கின்றன. ஈரான் மீதான அமெரிக்கா - இஸ்ரேல் போர் சர்னி சங்க்வியின் வளர்ச்சியை பாதித்திருக்கிறது. அதிகரிக்கும் சாலை வரிகள் போன்ற பிற விஷயங்களால் ஏற்கனவே இந்த வளர்ச்சி பாதிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.







