சுகுணாவின் கதை
வணக்கம்! என் பேர் சுகுணா. இந்த வேலையை 2008-லருந்து பார்த்துக்கிட்டு இருக்கேன். நான் சின்ன வயசா இருக்கும்போதே அங்க அம்மா அப்பா இறந்துட்டாங்க.
எங்க அப்பா இறந்ததுக்கு அப்புறமா பொம்மை செய்ற கம்பெனி, எங்க வீட்டு பக்கத்துல இருந்ததால எங்க அம்மா அங்க வேலைக்கு போனாங்க . அங்க வேலை செஞ்சிட்டு வரும்போது எங்களுக்கு அங்க இருந்து பொம்மை எல்லாம் எடுத்துட்டு வருவாங்க. அப்பதான் பொம்மை மேல ரொம்ப ஆர்வம் ஆச்சு. நாலு வயசுல இருந்து படிப்பை விட எனக்கு பொம்மை மேலதான் ரொம்ப ஆர்வமாச்சு. ’இது எப்படி செய்றாங்க… இது எப்படி இருக்கும்’னுரொம்ப ஆர்வமாயிடுச்சு எனக்கு.
அதுக்கப்புறம் அம்மா இறந்துட்டாங்க. அம்மா இறந்ததுக்கு அப்புறம் பாட்டி தான் ஸ்கூலுக்கு போக வேணாம்ன்னாங்க. ’என்னால உங்கள பாத்துக்க முடியாது’ன்னு சொல்லி வேலைக்கு போக சொன்னாங்க. எங்க அக்கா வேலை பார்த்த அதே ஃபேக்டரிக்குதான் என்னையும் அனுப்பினாங்க. அப்போ எனக்கு பத்து வயசு.
முதல்ல நான் மண்ண கலக்குற வேலையைதான் செஞ்சிட்டு இருந்தேன். பொம்மையை தொடக்கூட மாட்டேன். இரண்டு வருஷம் கழிச்சு மண்ணை அந்த பொம்மை அச்சுல ஊத்தவும் அதுக்கு அப்புறமா காஸ்டிங் பண்ணவும் ஆரம்பிச்சேன். அதுக்கப்புறம் இதுல இன்னும் கொஞ்சம் நல்லா வரணும்னா வேற கத்துக்கணும் என்பதற்காக ஓவியம் கத்துக்க ஆரம்பிச்சேன்.
ஓவியம் பண்ண ஆரம்பிச்சு அதை முழுசா கத்துக்குறதுக்கு எனக்கு நாலு வருஷம் ஆயிடுச்சு. 14 வயசுல இருந்தே ஓவியம் பண்ண ஆரம்பிச்சேன். அப்போ எனக்கு சம்பளம் ஒரு நாளைக்கு 75 ரூபாய்தான். ஓவியம் பண்றவங்களுக்கு 100 ரூபாய் சம்பளம் கொடுத்துட்டு இருந்தாங்க.அதனால எனக்கு சம்பளம் அதிகமா வேணும்னு சொன்னதுக்கு, தர முடியாதுன்னு சொல்லி, ’உனக்கு சின்ன வயசு,இப்பவே நீ இவ்ளோ சம்பளம் கேக்குறே’ன்னு சொல்லிட்டாங்க. அதனால அதிலருந்து வெளியில் வந்தேன்.
அதுக்கப்புறம்தான் காண்ட்ராக்ட் எடுத்து பாக்க ஆரம்பிச்சேன். ஒரு பத்து கம்பெனி ஆர்டர் கொடுத்தாங்க. அவங்களுக்கு ஆர்ட் ஒர்க் மட்டும் பண்ணி கொடுக்க ஆரம்பிச்சேன். அப்பதான் நெனச்சேன் நாம திறமையை மேம்படுத்துனா, நம்ம வேலை நம்மள மேம்படுத்தும்னு.
அதுக்கப்புறம் எனக்குன்னு ஒரு தனி மரியாதை கிடைத்தது. அப்போ எல்லாம் ஆர்ட் பண்றவங்க எல்லாம் டேபிளில் உட்கார்ந்து பண்ணனும். மத்தவங்கள மாதிரி கீழ உட்கார்ந்து பண்ண கூடாது அந்த மாதிரி எல்லாம் இருந்தது. என்னை வேலைக்கு வேணாம்னு சொன்ன ஆட்கள், கம்பெனி எல்லாருமே கூப்பிட ஆரம்பிச்சாங்க. ஏன்னா என்னோட வேலைல ஃபினிஷிங் நல்லா பண்ணி கொடுப்பேன். அதே மாதிரி கண்ணு, லிப்ஸ் எல்லாம் நல்லா வரைஞ்சு கொடுப்பேன்.
சில இடங்களில அவங்க நடந்துக்கிற விதம்,பெண்களை பார்க்கிற விதம், அவுங்கள கிண்டல் அடிக்கிற விதம் எல்லாம் எனக்கு பிடிக்காது. அதனால அவங்க எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் அந்த இடத்துக்கு நான் போக மாட்டேன்.
என் வீட்டுக்காரரும் இது மாதிரி ஆர்டர் பார்க்க போன இடத்துல, பார்த்து பழகிதான் லவ் மேரேஜ் பண்ணிகிட்டோம். அவர் வெளிநாடு போகணும்னு ஆசைப்பட்டாரு. ஆனா கல்யாணம் பண்ணா கம்பெனி வைக்கணும்னு கண்டிஷன் போட்டுதான் அவரை கல்யாணமே பண்ணிக்கிட்டேன்.
ஏன் இந்த வேலை புடிச்சிருக்குன்னு கேட்டா எனக்கு நெஜமாவே தெரியல. மண்ணா இருக்கு. அதுக்கு ஒரு உருவம் கொடுக்கிறேன். அந்த உருவத்தில் இருந்து நான் ஒண்ணு வரைஞ்சு அதுக்கு ஒரு உயிர் கொடுக்கிறேன். அதை எல்லாரும் வந்து பார்க்குறாங்க. அது எல்லாருக்கும் பிடிச்சிருக்கு. அந்த விஷயம் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு. அதனால எனக்கு இந்த வேலை ரொம்ப புடிச்சிருக்கு.