“மின்சாதனங்கள் இந்த பாரம்பரிய முறையை அழித்துவிடும்.” பானை தயிரை, நெதாரா என்னும் இரு முனையில் கைப்பிடி இருக்கும் பருத்தி கயிறால் கடைவதில் எழும் சத்தத்தை தாண்டி ராயாலி பாய் சொல்கிறார். பின்னணியில் குன்றுக்கு பின்னாலிருந்து பறவை சத்தங்கள் ஒலிக்கின்றன.
குஜராத்தின் எல்லை அருகே இருக்கும் ராஜஸ்தானின் சிரோஹி மாவட்ட உப்லகர் கிராமத்தில் நேரம், காலை 5.30 மணி. மலைப்பாங்கான பகுதி என்பதால், கான்க்ரீட் தெருக்கள் மேலும் கீழுமாக செல்கின்றன. இப்பகுதியில் போக்குவரத்துக்கு அதிகம் பயன்படுத்தப்படும் மோட்டார்சைக்கிளில் செல்கையில் கவனம் அதிகம் தேவை. தாழ்வான கூரை கொண்ட வீடுகள், சில கல் வீடுகள், சில மண் வீடுகள் தெருக்களில் இருக்கின்றன. ராயாலி பாயின் கல் வீடை போல, பெரும்பாலான வீடுகளில் இரு அறைகளும் வராண்டாவும் இருக்கிறது. எனினும் அவரது வீடு கிராமத்தின் மையத்தில் இல்லை. ஒரு குன்றில் இருக்கிறது. கொஞ்ச தூரம் நடந்துதான் செல்ல வேண்டும்.
ராயாலி பாய் போன்ற பெரும்பாலான கிராமவாசிகள், பட்டியல் பழங்குடி சமூகமான கராசிய சமூகத்தை சேர்ந்தவர்கள். நாற்பது வயதுகளில் இருக்கும் அவர் பள்ளிக்கு சென்றது கிடையாது. ஆச்சரியம் இல்லை. உப்லாகரில் 27 சதவிகித ஆண்களும் 10 சதவிகித பெண்களும் (கணக்கெடுப்பு 2011) மட்டும்தான் கல்வி பெற்றிருக்கின்றனர்.








