இந்தக் கட்டுரை, புலிட்சர் மையத்தின் செயற்கை நுண்ணறிவு பொறுப்புக்கூறல் வலையமைப்பால் ஆதரிக்கப்பட்டது.
கிழக்கு இந்திய மாநிலமான ஜார்க்கண்டில், பசிங் முண்டா தனது மூதாதையர்களை கௌரவிக்கும் நினைவுப் பலகைகளால் சூழப்பட்ட ஒரு களத்தில் நிற்கிறார். பல தலைமுறைகளுக்கு முன்பு, அவரின் மூதாதையர்கள், காலனித்துவ ஆட்சியாளர்கள், பழங்குடி மக்களை அந்நியப்படுத்துவதற்கு எதிரான போராட்டத்தில், மரியாதைக்குரிய பழங்குடியினத் தலைவர் பிர்சா முண்டா தலைமையிலான 1899 முண்டா எழுச்சியில் இணைந்து போராடியுள்ளனர்.
தற்போது நூற்றாண்டுகள் தாண்டி, நாற்பது வயதைக் கடந்த, பசிங் போன்ற முண்டா பழங்குடி விவசாயிகள், ஒரு புதிய வகையான சொத்துரிமை பறிப்பை எதிர்கொள்கின்றனர். கடந்த எட்டு ஆண்டுகளில், அரசாங்கம் அவர்களின் நிலப் பதிவுகளை அவர்களின் ஒப்புதல் இல்லாமலும், அவர்களுக்கு அறிவிக்காமலும் டிஜிட்டல்மயமாக்கியுள்ளது. இந்தச் செயல்பாட்டால், நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்கள் நில அளவுகள், அதிகாரப்பூர்வ ஆவணங்களில் திடீரென சுருங்கி வருவதையும், அதன் எல்லைகள் மாறுவதையும், உரிமை சத்தமில்லாமல் கைநழுவிப் போவதையும் கண்டறிந்துள்ளனர்.
இது ஏப்ரல் மாதம். மாநிலத் தலைநகர் ராஞ்சியிலிருந்து 33 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குந்தி மாவட்டத்தில் உள்ள தரகாமாவுக்கு செல்லும் சாலை முழுவதும், வசந்த கால மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. பூர்வீக இயற்கைக் கொண்டாட்டமான சர்ஹுல் பண்டிகைக்கு சில நாட்களுக்குப் பிறகு, உள்ளூர் சந்தை பரபரப்பாக உள்ளது.
தங்கள் வீடுகளுக்கு வெளியே உள்ள வெட்டவெளியில், பசிங்கும் மற்றவர்களும் பலாஷ் (காட்டின் சுடர்) மற்றும் அரசமரங்களின் நிழலில் கூடி, அவர்களின் முண்டாரி மொழியில் உரையாடிக் கொண்டிருந்தனர்.
2023ம் ஆண்டில், 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள குந்தியில் உள்ள நிலம் மற்றும் வருவாய்த் துறை அலுவலகத்திலிருந்து பசிங்குக்கு ஆன்லைன் வரி ரசீது வந்திருந்தது. பசிங் மற்றும் அவரது சகோதரர்களுக்குச் சொந்தமான, அவர்களின் நெல் மற்றும் தினை பயிரிடும் நிலம், ரசீதில் 52 ஏக்கர் மற்றும் 52 டிஸ்மில் என்பதற்குப் பதிலாக 52 ஏக்கர் மற்றும் 5 டிஸ்மில் என தவறாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
டிஸ்மில் என்பது, மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவில் பொதுவான நில அளவீட்டு அலகு ஆகும். இது 435.6 சதுர அடி அல்லது ஒரு ஏக்கரில் நூறில் ஒரு பங்கிற்கு சமம். இந்த வார்த்தை 'டெஸிமல்'லிருந்து வருகிறது. எனவே ஒரு டிஸ்மில் என்பது மும்பையில் சராசரியாக ஒரு படுக்கையறை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் அளவு. மேலும் பசிங்கின் நிலம் அதிகாரப்பூர்வ பதிவுகளில், ஒரே இரவில் மற்றும் எச்சரிக்கை இல்லாமல் 47 டிஸ்மில் சுருங்கிவிட்டிருந்தது.
இந்த பிரச்சினை பசிங்கிற்கு மட்டும் இல்லை.
“நிலப் பதிவுகளில் பல தவறான மாற்றங்கள் இருந்தன. டிஜிட்டல் மயமாக்கலுக்கு முன்பு, எங்கள் கட்டாவின் ரக்பா [ஒரு குழுவிற்கு கூட்டாகச் சொந்தமான நிலத்தின்] பரப்பளவு வேறுபட்டது. சமீபத்திய ஆன்லைன் பதிவுகள் மற்றும் ரசீதுகளில், சில நிலங்கள் அகற்றப்பட்டுள்ளன. மேலும் ரக்பா குறைக்கப்பட்டுள்ளது,” என்று பசிங் கூறுகிறார். நிலப் பதிவுகள் அறிவிக்கப்படாமல் டிஜிட்டல்மயமாக்கப்படும்போது, நில உரிமையாளர்கள் பெரும்பாலும் தவறுகள் இருப்பதை கண்டறிகிறார்கள் என்று அவர் மேலும் கூறுகிறார்.














