சஜ்னேகாலி புலிகள் காப்பகம், பிர்காலி மற்றும் டோபங்கி புலிகள் காப்பகம் வழியாக படகு பயணிக்கும் போது, பானுமதிக்கு கடந்து செல்லும் நிலப்பரப்பைப் பார்க்கக்கூட நேரம் இருப்பதில்லை. பரந்து விரிந்த நீர்நிலை, கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் சிறகுலர்த்தும் பறவைகள் மங்கலாகி விடுகிறது. இத்தகைய பயணப் படகுகளில், ஒரு சமையல்காரர் உணவு சமைப்பார். இவரை போன்ற உதவியாளர்கள் எப்போதும் பிஸியாக இருப்பார்கள். உருளைக்கிழங்கு, பருப்பு மற்றும் முட்டைகளை வேகவைக்க வேண்டும். இஞ்சி, பூண்டை நறுக்க வேண்டும் மற்றும் பல உணவுகளைத் தயாரிக்க, பல்வேறு மசாலாப் பொருட்களை அரைக்க வேண்டும்.
பகல் பொழுது கடக்க கடக்க, வெப்பம் அதிகரிக்கும். சமையலறையில் வேலை செய்யும் பெண்கள், ஆசுவாசிக்க சிறிய இடைவேளைகளை எடுக்க வேண்டும். “தராதரி ஹாத் சலா [வேகமாக வேலை செய்யுங்கள்],” என்று அவர்கள் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்கிறார்கள். “மோட்டார் இயங்கத் தொடங்கினால், நாம் தான் வேக வேண்டும்,” என்று லிபிகா மொண்டல் சிரித்துக் கொண்டே கூறுகிறார். சமையல்காரராகவும் சில சமயங்களில் உதவியாளராகவும் இருக்கும் அவர், சமையலறைக்கு அருகில் உள்ள மோட்டார் ஓடும் போது சமையலறையின் வெப்பநிலையை உயரும் என்று குறிப்பிடுகிறார். சமையல்காரர்களாகவும், உதவியாளர்களாகவும் இருக்கும் பெண்கள், இங்கு வெப்பம் இடைவிடாது உள்ளது என்கின்றனர். மேலும் வெப்பத்தில் இருந்து ஓய்வெடுக்க ஐந்து நிமிட இடைவெளி கூட கிடைக்காது என்கின்றனர்.
கொல்கத்தாவிலிருந்து 110 கிலோமீட்டர் தொலைவில், சுந்தரவனக் காடுகளின் கோசாபா தீவில் அமைந்துள்ள பக்கிராலே கிராமத்தில் இருந்து பயணப் படகுகள் புறப்படுகின்றன. இது ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகும். இது வங்காளப் புலிகளை (பாந்தெரா டைகிரிஸ் டைகிரிஸ்) பார்க்க வாய்ப்புள்ள சுந்தரவனக் காடுகளின் மையப் பகுதிக்கான நுழைவாயிலாகும்.
சுற்றுலா அமைப்பாளர்கள், பொதுவாக ஒரு படகில் சுமார் 40 சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்கின்றனர். ஆறு மணி நேரம் நீடிக்கும் இந்த பயணத்திற்கு, ஒவ்வொரு பயணிக்கும் ரூ. 2,000 - 5,000 வரை செலவாகும். இரண்டு நாட்கள் வரை நீடிக்கும் நீண்ட பயணங்களுக்கு அதிக விலை இருக்கும். பொதுவாக இரண்டு தளங்களைக் கொண்டிருக்கும் படகுகளின் தரை தளத்தில், சுற்றுலாப் பயணிகள் பகலின் வெப்பத்தில் இருந்து ஓய்வெடுக்க படுக்கைகள் மற்றும் தலையணைகள் இருக்கும்.










