குறிப்பு: முதியவர்கள் மற்றும் இயலாமை பற்றி பாரி பல கதைகளை வெளியிட்டுள்ளது. இப்போது நாங்கள் அதனை ஒரு குறிப்பிட்ட கருப்பொருளாக கவனம் செலுத்துகிறோம். இது எங்களின் முதல் படைப்பு.


Sangrur, Punjab
|WED, OCT 01, 2025
பசுமைப் புரட்சி, சிவப்பு அறுவடை
பஞ்சாப் கிராமப்புறங்களில், விவசாய இயந்திர விபத்துகளால் ஏற்படும் உடல் இயலாமை பொதுவானது, ஆனால் வாழ்க்கை தொடர்கிறது. அக்டோபர் 1 ஆம் தேதி, ஐக்கிய நாடுகளின் சர்வதேச முதியோர் தினத்திற்கான, முதுமை மற்றும் இயலாமை பற்றிய ஒரு கதை
Author
Editor
Photo Editor
Translator
பல தசாப்தங்களுக்கு முன்பு, தனது வலது கையை இழந்த சுர்ஜித் சிங், இன்னும் தன் இயலாமையை ஏற்றுக்கொள்ள தயங்குகிறார்.
“தீவனத்தை அறுவடை செய்ய இரண்டு கைகள் தேவை. ஒன்று அதைப் பிடிப்பதற்கு, மற்றொன்று அதை அரிவாளால் அறுவடை செய்வதற்கு, எனவே அதைத் தவிர, மற்ற எல்லா வேலைகளையும் என்னால் செய்ய முடியும்,” என்கிறார் இந்த வயதான விவசாயி. பின்னர், சங்ரூர் மாவட்டம், ரங்கியன் கிராமத்தில் உள்ள தனது பத்து ஏக்கர் பண்ணையில், ஒவ்வொரு நாளும் அவர் செய்யும் பல வேலைகளை பட்டியலிடுகிறார்
ஆனால் அவரது மனைவி குல்வந்த் கவுர், உரையாடலில் நுழைந்து, அவரது பெருமையை தயக்கமின்றி கிழித்து எறிகிறார். "அவரால் அவரது கால்சட்டையின் நாடாவை கட்ட முடியாது. கழிவறையில் தன்னை சரியாக சுத்தம் செய்ய கொள்ள முடியாது. முதுகில் அரிப்பு ஏற்படும் போது சுவரில் அல்லது மரத்தில் தனது முதுகைத் தேய்க்க விரைகிறார்."
இருப்பினும், சுர்ஜித் சிங், ஊனமுற்ற குடிமகனுக்கான சலுகைகளுக்கு 'தகுதி' பெறவில்லை. அவர் பட்வாரியை (நிலப் பதிவுகளை வைத்திருக்கும் கிராம அளவிலான அரசு அதிகாரி) அணுகியும் பயனில்லை. ‘உங்களுக்கு நிலம் சொந்தமாக இருப்பதால் உங்களுக்கு தகுதியில்லை,’ என்று அவர் கூறியதும் வீடு திரும்பிவிட்டேன்," என்கிறார் சுர்ஜித். இது முட்டாள்தனமான பதில். ஏனெனில் நில உரிமையாளர்கள் மற்றும் நிலமற்றவர்கள், இருவருக்கும் இந்த சட்டத்தின் கீழ் உரிமை உண்டு. சுர்ஜித்துக்கு எந்த இழப்பீடும் கிடைக்கவில்லை, அவருக்கு ஊனமுற்றோருக்கான ஓய்வூதியமும் (பஞ்சாபில் மாதம் ரூ.1,500) கிடைக்கவில்லை. 60-69 வயதுக்குட்பட்டவர்களுக்கு ரூ.1,500, 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரூ.2,000 என அவருக்கு முதியோர் ஓய்வூதியமும் கிடைக்கவில்லை.

Vishav Bharti

Vishav Bharti
72 வயதில், ஒரு கையால் ஓய்வில்லாமல் உழைக்கும் தனது மகத்தான திறனைப் பற்றி மட்டுமே பெருமைப்படும், ஒரு அமைதியான மனிதர், அவர். சரி, மற்றொரு கையை எப்படி இழந்தார்? அது 1990-களின் மத்திய காலம் என்று சுர்ஜித் துவங்குகிறார். “எனக்கு எளிதில் கவனம் சிதறிவிடும் என்பதால் என் சகோதரர் அடிக்கடி என்னை தீவனம் வெட்டும் வேலை செய்வதை தடுப்பார். அன்று நாங்கள் டோகா (சாஃப் கட்டர்) இயந்திரங்களை பழுதுபார்த்தோம், கரும்பை தீவனமாக்க வெட்டிக் கொண்டிருந்தோம். முதலில் என் விரல்கள் ரோலரில் சிக்கிக்கொண்டது. பின்னர் அது என் முன்கையை இழுத்து, அதற்குப் பின் என் கையை முழுதும் இழுத்துவிட்டது,” என்று அவரது சிவந்த கண்கள் வெறுமையாகக் கூறுகிறார்.
ஆனால் அவரது மனைவி குல்வந்த் கவுர், 65, அவர் விட்ட இடத்தில் இருந்து தொடர்கிறார். “கையும் தீவனம் போல சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டுப்பட்டுவிட்டது, சுற்றிலும் ஒரே இரத்தம். அதைப் பார்த்ததும் நான் மயக்கமடைந்து விட்டேன்.” சுர்ஜித், சுமார் 20 நாட்கள் மருத்துவமனையில் இருந்தார். ஆனால் நடந்ததை நினைத்து வருத்தப்பட அவருக்கு நேரமில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, வாழ்க்கை நடத்த சம்பாதிக்க வேண்டி இருந்தது. சுமார் ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு அவர் மீண்டும் வயல்களுக்குச் சென்றார். “எங்கள் பக்கத்து வீட்டுக்காரர்களில் ஒருவர், அவரைத் தடுக்க முயன்ற போதிலும், சுர்ஜித் தன் ஒரு கையால் ஆழ்துளைக் கிணற்றில் இறங்கி அதைச் சரிசெய்ததாக கூறியபோது தான் எங்களுக்கே தெரியவந்தது. அவர் தன் கையை இழந்ததற்காக புலம்பி, நான் ஒரு முறை கூட பார்த்ததில்லை,” என்கிறார் குல்வந்த்.
“அவரது இரண்டு கைகளும் நன்றாக இருந்திருந்தால், இந்தச் சுவர்களை சொக்கத் தங்கத்தில் பதித்திருப்பார். அவ்வளவு கடின உழைப்பாளி,” என்று அவர் கூறுகிறார்.
சுர்ஜித் சிங்கும், அவரைப் போன்ற பலரும் 1970களின் முற்பகுதியில் பசுமைப் புரட்சி, அதன் தொழில்நுட்பங்கள், மற்றும் ஆட்டோமேஷனின் இன்னொரு வகையான 'அறுவடை'யின் அடையாளமாகின்றனர். பஞ்சாபின் கிராமங்களில், அவரைப் போன்ற பல கதைகள் உள்ளன. ஆனால் அவை அமைதியாக புதைந்து கிடக்கின்றன.

Vishav Bharti
1975 முதல் 1978 வரை, இந்த மாநிலத்தில் மட்டும், 841 பண்ணை இயந்திர விபத்துக்கள் நடந்துள்ளன.
பஞ்சாப் வேளாண் சந்தைப்படுத்தல் வாரியத்தால் தொகுக்கப்பட்ட தரவுகளின்படி, 2007–12-க்கு இடையில் மொத்தம் 6,196 பண்ணை விபத்துக்கள் நடந்துள்ளன. இவற்றில் 4,218 அல்லது 68.08 சதவீதம், சாஃப் வெட்டும் இயந்திரங்களில் நிகழ்ந்துள்ளன. மேலும் 1,395 அல்லது 22.51 சதவீதம், கூட்டு அறுவடை இயந்திரங்கள் மற்றும் கதிரடிக்கும் இயந்திரங்களில் நிகழ்ந்துள்ளன. மேலும் 583 அல்லது 9.41 சதவீதம், டிராக்டர்கள் மற்றும் அது தொடர்புடைய கருவிகளில் நிகழ்ந்துள்ளன.
பழமைவாத மதிப்பீடுகளாகக் கருதி, சந்தைப்படுத்தல் வாரியத்தின் விபத்துத் தரவுகளை பகுப்பாய்வு செய்த மற்றொரு ஆய்வு, சாஃப் வெட்டும் இயந்திரம் மற்றும் கதிரடிக்கும் இயந்திரம் தொடர்பான விபத்துக்களில் 67.5 சதவீதம், விரல்கள் துண்டிப்பிற்கு வழிவகுத்தன என்பதைக் காட்டுகிறது. மேலும் 18.2 சதவீதம் பேர் முன்கைகளை இழக்க காரணமாகியுள்ளது. மேலும் 10.5 சதவீதம் பேர் முழு கைகளை இழக்க காரணமாகியுள்ளது. விவசாய விபத்துகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்த 2017 ஆய்வு, லூதியானாவில் உள்ள பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகத்தின் பண்ணை இயந்திரங்கள் மற்றும் மின் பொறியியல் துறையால் வழங்கப்பட்டது.
ஆனால் PAU ஆய்வு, சந்தைப்படுத்தல் வாரியத்தின் தரவையும் விசாரித்து, 2007-12 காலகட்டத்தில் வெறும் மூன்று ஆண்டுகளில் நடந்த பண்ணை விபத்துகளின் உண்மையான எண்ணிக்கை 9,188 என்று அறிவித்தது. மேலும் அதற்கான 250 மில்லியன் ரூபாய் இழப்பீடு, வெறும் 5,492 நபர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது, அதாவது சராசரியாக ஒவ்வொருவருக்கும் ரூ. 50,000 க்கும் குறைவாக வழங்கப்பட்டுள்ளது. ஆகவே குறைந்தபட்சம், விபத்தில் பாதிக்கப்பட்ட 3,696 அல்லது மொத்த 9,188 பேரில் 40 சதவீதத்திற்கும் அதிகமானோர் எந்த இழப்பீடும் பெறவில்லை.
பசுமைப் புரட்சியுடன் புதிய வகையான இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே இந்த விபத்துகள் தொடங்கிவிட்டன. பண்ணை விபத்துகளால் ஊனமுற்ற ஒருவர் இல்லாத கிராமமே பஞ்சாபில் இல்லை. துரதிர்ஷ்டவசமாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊனமுற்ற பிறகு நிலவும் சூழ்நிலையும் பெரும்பாலும் மோசமாகவே உள்ளது. "முக்கிய பொருளாதார பிரச்சனை, அவர்களின் வருடாந்திர வருமானத்தில் பெரிய இழப்பு மற்றும் நிரந்தர உடல் ஊனம்," என்று சண்டிகரைச் சார்ந்த வளர்ச்சி மற்றும் தொடர்பு நிறுவனம் நடத்திய ஆய்வு குறிப்பிடுகிறது. "இது அவர்களை அன்றாட வேலைகளுக்கும் மற்றவர்களைச் சார்ந்திருக்க வைக்கிறது."
பண்ணை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டுக் கொள்கையை முதலில் கொண்ட மாநிலங்களில் ஒன்று, பஞ்சாப். இந்திய நாடாளுமன்றம் 1983ல் ஆபத்தான இயந்திரங்கள் (ஒழுங்குமுறை) சட்டத்தை நிறைவேற்றியது. அடுத்த ஆண்டு பஞ்சாப், பண்ணை விபத்துகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவித் திட்டத்தை அமைத்தது. ஆனால் அந்தக் கொள்கையை 1984ல் உருவாக்கியதிலிருந்து, அதனை சரியாக செயல்படுத்தவில்லை. அதற்கு வாழும் உதாரணம் சுர்ஜித்.
பட்டியாலா சமஸ்தானத்தின் நிலப்பிரபுத்துவ ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடிய வரலாற்றைக் கொண்ட அவரது சொந்த கிராமமான ரங்கியனில், விவசாய இயந்திர விபத்துகளால் நிறைய ஊனங்கள் ஏற்பட்டிருந்தன. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் இறந்தும் விட்டனர், பிழைத்து இருக்கும் இருவரில், சுர்ஜித் ஒருவர்.
1982ம் ஆண்டு ஒரு கதிரடிக்கும் இயந்திரத்துக்கு தனது வலது கையை இழந்த 73 வயதான விவசாயி பால் சிங், நாற்பது வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை பற்றி இப்போது நினைத்தாலும் நடுங்குகிறார். "நான் ஒரு கடா (சீக்கிய கை காப்பு) அணிந்திருந்தேன். என்னால் வெட்டியாக உட்கார முடியாது. அதனால் கதிரடிக்கும் இயந்திரம் இயங்கிக் கொண்டிருக்கையில் எண்ணெய் தடவ ஆரம்பித்தேன். என் கடா, ஃபீடரில் உள்ள பெரிய போல்ட்களில் ஒன்றில் சிக்கிக்கொண்டது, அது என் கையை மிகவும் வலுவாக இழுத்ததில் எலும்பு உடைந்துவிட்டது. அடுத்த கணம் என் கை மணிக்கட்டின் ஒரு பகுதியுடன் தரையில் கிடந்தது. தடிமனான வட்டமான கடா செவ்வக வடிவமாக மாறியிருந்தது. அது மிகவும் வேதனையாக இருந்தது. அதற்கு பதிலாக என் கையை ஒரு சாஃப் கட்டர் மூலம் வெட்டியிருக்கலாம். அது லேசாக இருந்திருக்கும்," என்று அவர் கூறுகிறார்.
பால், 20-25 நாட்கள் மருத்துவமனையில் கழித்தார். இருப்பினும், சுர்ஜித்தைப் போலவே, அவருக்கும் பேரழிவைப் பற்றி யோசிக்க நேரமில்லை. "நான் இரண்டு மாதங்களுக்குள், டிராக்டரை ஓட்டத் தொடங்கினேன். எப்போதும் போல, உழவு மற்றும் விதைப்பு ஒப்பீட்டளவில் எளிதாக இருந்தது, ஆனாலும் சமன்படுத்தலும் செய்தேன். நான் அதிகாலை 4 மணிக்கு சமன்படுத்தும் வேலையைத் தொடங்குவேன். தொடர்ந்து 16 மணி நேரம் அதைச் செய்வேன். இது பெரும்பாலும் இரண்டு கைகள் பயன்படுத்த வேண்டிய வேலை.”
வாழ்க்கை, அப்படி ஒன்றும் பெரிதாக மாறவில்லை என்று அவர் கூறுகிறார். “பெரிதாக மாறவில்லை. எப்போதும் என் கையை இறுக்கமாகப் பிடித்திருப்பது போல் உணர்கிறேன். எவ்வளவு முயற்சி செய்தாலும், என்னால் அதைத் திறக்க முடிவதில்லை. இப்போது நான் என் வலது கை செய்திருக்குமா என்பது நினைவில் கூட இல்லாத அளவுக்கு, நான் என் இடது கையைப் பயிற்சி செய்து வைத்திருக்கிறேன்.”

Vishav Bharti

Vishav Bharti
பால் சிங் போலல்லாமல், அதே கிராமத்தை சேர்ந்த 70 வயதுகளை சேர்ந்த நசீப் கெளர், அவரது இடது கை பற்றிய நினைவுகளின் சுமையை சுமக்கிறார். பத்தாண்டுகளுக்கு முன் சாப் வெட்டுக் கருவியை இயக்கும்போது இடது கையை அவர் இழந்துவிட்டார். "தீவனம் வெட்டுவது வழக்கமான வேலை. பால்யவயது முதல் அந்த வேலையை செய்து வருகிறேன். மாலை 7 மணி இருக்கும். முதலில் என் கட்டை விரல் உருளைகளுக்கு இடையில் சிக்கிக் கொண்டது. பிறகு கையும் உள்ளே சென்று விட்டது. நான் கத்தினேன். என் மருமகள் பதட்டமாகியதால் எஞ்சினை நிறுத்த முடியவில்லை. என் சத்தத்தை கேட்டு அண்டை வீட்டார் ஓடி வந்து எஞ்சினை நிறுத்தி, கையை எந்திரத்தில் இருந்து எடுத்தார்கள்."
மாத உதவித்தொகையான ரூ.1,500-ஐ மூவரில் பெறுபவர் அவர் மட்டும்தாப். ஆனால் நிவாரணமோ ஊனமுற்றோருக்கான உதவித்தொகையோ இல்லை. மூவரிக் பால் சிங் மட்டும்தான் ஊனமுற்றோர் உதவித்தொகை ரூ.1,500 பெறுகிறார். சுர்ஜித் சிங் எதையும் பெறவில்லை. அரசு பலன்களை பெறுவது முதியோருக்கு எப்போதும் சுலபமில்லை. முதிய வயதில் ஊனம் கொண்டவர்களுக்கு அதிகார வர்க்கத்தின் ஊடான பெரும் போராட்டம். அதிகாரிகள் பெரும்பாலும் இவர்களின் கோரிக்கைகளை விளக்கமின்றி நிராகிரித்து விடுவார்கள்.
தலைவாரி சடை போட்டு சமையல் வேலை செய்யும் நாட்களையும் மாட்டுப் பால் கறந்த நாட்களையும் நினைவுகூருகிறார் நசீப். சற்று நேரம் கழிந்து, "இப்போது என்னால் முடிவதில்லை," என்கிறார்.

Vishav Bharti
அவரால் ரொட்டி உருட்ட முடியுமா? “செய்து தானே ஆக வேண்டும். ஒழுங்கற்ற வடிவத்தில் வந்தாலும், வேறு என்ன செய்வது? இப்படியெல்லாம் நடக்க நான் என்ன தவறு செய்தேன்?" கண்கள் கலங்கி, கண்ணீர் அவரின் கன்னங்களில் வழிகிறது. அவற்றைத் தன் வெள்ளை துப்பட்டாவால துடைக்கிறார். “கடினமான காலத்தை எளிதில் மறக்கமுடியாது,” சுர்ஜித்தின் மனைவி குல்வந்த் அவரை ஆறுதல்படுத்த முயற்சிக்கிறார்.
இதையெல்லாம் பார்த்த சுர்ஜித் சிங், அமைதியாக கட்டிலில் இருந்து எழுந்து தனது எருது கட்டப்பட்டிருக்கும் இடத்திற்கு சென்று, பாதி இழந்த வலது கையால, கயிற்றின் முடிச்சுகளை அவிழ்க்கத் தொடங்குகிறார். பேசப்படாமல், காணப்படாமல், ஆனால் ஒருபோதும் முழுமையாக மறையாமல் போன அவரது வலது கை, இன்னும் அசைவது போல் தெரிகிறது.
பாரிசீனியர் மானியப்பணி 2025-ன் ஆதரவில் இக்கட்டுரை பிரசுரிக்கப்பட்டது
தமிழில் : அஹமத் ஷ்யாம்
Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]
Donate to PARI
All donors will be entitled to tax exemptions under Section-80G of the Income Tax Act. Please double check your email address before submitting.
PARI - People's Archive of Rural India
ruralindiaonline.org
https://ruralindiaonline.org/articles/in-punjab-green-revolution-red-harvest-ta

