அமெரிக்காவிலிருந்து அமிர்தசரஸுக்கு செல்லும் C-17 விமானத்தின் சீட்டில் கட்டிப் போடப்பட்டு விலங்கு பூட்டப்பட்டு கைதாகி கொண்டு வரப்படும் அதிர்ஷ்டம் ரந்தீப் சிங்குக்கு வாய்க்கவில்லை. அந்நிய தேசங்களில் 264 நாட்கள் போராடி, கம்போடியாவிலிருந்து அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக பயணித்தபோது இந்த வருட பிப்ரவரி 21ம் தேதி உயிரிழந்தார்.
ஆனால் பர்கத் சிங் அதிர்ஷ்டசாலி. வெளிநாட்டு கனவில், தாயின் நகையையும் குடும்பத்துக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தில் பாதியையும் விற்றுவிட்டு அமெரிக்காவுக்கு சென்ற பஞ்சாபி அவர். இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். கை விலங்கு பூட்டி நாடு திரும்பினார். சொந்த ஊரில் நடந்த கதையேனும் சொல்லலாம் அவர்.
பஞ்சாபின் மொகாலி மாவட்டத்திலுள்ள கிராமமான ஷேக்புரா கலானிலுள்ள ரந்தீப்பின் வீட்டில், துயரச் சூழலை கொண்டு வரும் சதார் நிகழ்வு - குடும்பத்தில் மரணம் நேர்ந்த பிறகு தரையில் அமர்ந்து செய்யப்படும் சடங்கு - அவரது வாழ்க்கைக்கான சான்றளிக்கிறது. துக்கம் அனுசரிப்பவர்களுக்கு, ஈரறை வீட்டில் இடம் குறைவாக இருக்கிறது. ரந்தீப்பின் உடல் வர அவர்கள் காத்திருக்கிறார்கள். ஆனால் விரைவில் அது நடப்பதாக தெரியவில்லை. கம்போடியாவில் இருக்கும் இந்திய தூதரகம் 7,100 டாலரை (கிட்டத்தட்ட 6,21,000 ரூபாய்) உடலை அனுப்ப ஆகும் செலவுக்கான முன் பணமாக கேட்டிருக்கிறது.
நல்ல நாளில் 500 ரூபாய் சம்பாதிக்கும் வகையிலான தினக்கூலி வேலை பார்த்துக் கொண்டிருக்கும் தந்தையான 55 வயது பல்விந்தர் சிங்குக்கு ஆறு இலக்க தொகை என்பது சாத்தியமே இல்லாத விஷயம். தெரிந்தவர்களோ தெரியாதவர்களோ வருபவர்கள் அனைவரையும் மங்கிய நம்பிக்கையுடன் பார்த்து ஒரு வாக்கியத்தை மட்டும் முணுமுணுக்கிறார் பல்விந்தர். “உடலை கொண்டு வர ஏதேனும் உதவுங்கள்.”
வேலையின்மையும் நெருக்கடியும் பீடிக்கும் கிராமப்புறத்தில் 24 வயது ரந்தீப் மட்டுமே பஞ்சாபை விட்டு தப்பியோட யோசிக்கவில்லை. நிலமற்ற தலித் குடும்பத்தில் பிறந்த அவர் நம்பிக்கையின்மையூடாகதான் வளர்க்கப்பட்டார். தொடர்ந்த விவசாய நஷ்டம், வேலையின்மை, தற்கொலைகள் கிராமப்புற பஞ்சாபை விழுங்கிக் கொண்டிருந்தது.










