20 வருடங்களுக்கு முன் எடுத்த முடிவால் இப்போது பாதிப்பு ஏற்படும் என பாலாசாகெப் லோந்தே கனவு கூட கண்டிருக்கவில்லை. மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்திலுள்ள ஃபர்சுங்கி என்கிற சிறு டவுனின் விளிம்புநிலை விவசாயக் குடும்பத்தில் பிறந்த லோந்தே, குடும்பம் பருத்தி விளைவிக்கு சிறு நிலத்தில் இளம்வயதிலிருந்தே வேலை பார்க்கத் தொடங்கினார். 18 வயதானதும் கூடுதல் வருமானத்துக்காக ஒட்டுநர் வேலையும் செய்ய முடிவெடுத்தார்.
“கால்நடைகளை கொண்டு செல்லும் வணிகம் செய்யும் ஓர் இஸ்லாமியர் குடும்பத்துக்கு என்னை ஒரு நண்பர் அறிமுகப்படுத்தினார்,” என்கிறார் 48 வயதாகும் அவர். “ஒட்டுநர்கள் தேவை அவர்களுக்கு இருந்ததால், நானும் அந்த வேலையில் சேர்ந்தேன்.”
வணிகத்தை கவனமாக பயின்று வியாபாரம் செய்யும் இளைஞராக லோந்தே இருந்தார். பத்து வருடங்களுக்கு பிறகு, போதுமான அளவுக்கு கற்றுக் கொண்டதாகவும் சேமித்து விட்டதாகவும் லோந்தே கருதினார்.
“பயன்படுத்தப்பட்ட ஒரு ட்ரக்கை 8 லட்சம் ரூபாய்க்கு வாங்கினேன். இன்னொரு 2 லட்சம் மூலதனத்துக்கு இருந்தது,” என்கிறார் அவர். “10 வருடங்களில் சந்தையின் விவசாயிகள் மற்றும் வணிகர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டேன்.”
லோதேவின் பணிக்கு வெற்றி கிடைத்தது. பயிர் விலை வீழ்ச்சி, விலைவாசி உயர்வு, காலநிலை மாற்றம் போன்றவற்றால் ஐந்து ஏக்கர் விவசாயம் பொய்த்துப் போனபோது, அவரின் வியாபாரம்தான் அவரைக் காப்பாற்றியது.
நேரடியான வேலை: கால்நடைகளை விற்க விரும்பும் விவசாயிகளிடமிருந்து அவற்றை வாங்கி, கமிஷனுடன் சேர்த்து கசாப்புக் கடைக்கோ அல்லது பிற விவசாயிகளுக்கோ விற்க வேண்டும். வியாபாரத்தில் பத்தாண்டுகள் இருந்த பிறகு, 2014ம் ஆண்டில் இரண்டாவது ட்ரக் வாங்கினார்.
பெட்ரோல் செலவு, வாகன பராமரிப்பு செலவு, ஓட்டுநர் சம்பளம் ஆகியவற்றை தாண்டி, மாத வருமானம் அச்சமயத்தில் 1 லட்சம் ரூபாய் வரை இருந்ததாக லோந்தே கூறுகிறார். இஸ்லாமிய குரேஷி சமூகம் அதிகமாக செய்து கொண்டிருந்த வணிகத்தில் இருக்கும் சில இந்துக்களில் அவரும் ஒருவராக இருந்தார். “தங்களின் தொடர்புகளையும் யோசனைகளையும் அவர்கள் கொடுத்து உதவினார்கள்,” என்கிறார் அவர். “எல்லாம் சரியாக இருப்பதாக நினைத்தேன்.”








