“இளம் வயதில் நான் அழகாக இருப்பேன். இப்போது என்னை கவனித்துக் கொள்ளக்கூட நேரமில்லை,” என்றபடி பெருமூச்சு விடுகிறார் நூர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவர் தனது வாடகை வீட்டின் படியில் அமர்ந்தபடி ஓய்வு நேரத்தை அனுபவிக்கிறார்.
டெல்லியில் தனியார் மருத்துவமனை ஒன்றில் தூய்மைப் பணியாளராக தற்போது வேலை செய்யும் நூர், 22 வயது முதல் கட்டுமானப் பணியிடங்கள், தொழிற்சாலைகள், வீட்டு வேலைக்கு செல்லுதல் என பல வேலைகளை செய்துள்ளார். “டெல்லி வந்தது முதல் நான் வேலை செய்து வருகிறேன்,” என்று அவர் பாரியிடம் தெரிவிக்கிறார்.
ரோஹிணி செக்டார் 15-ல் உள்ள மருத்துவமனையில் செவிலியர் பணியுடன், தூய்மைப் பணிகளையும் நூர் செய்து வருகிறார். நோயாளிகளின் அறைகளை சுத்தம் செய்யும் அவர், தேவைப்படும் போது அவர்களுக்கு உணவு, தண்ணீர் கொண்டு வந்து தருகிறார். நோயாளிகளுக்கு செவிலியர்கள் கட்டு கட்டும்போது உதவுவது, நோயாளிகளின் உடல்நிலையை கண்காணிப்பது போன்ற பணிகளையும் அவர் செய்கிறார். “ஒரு நாளுக்கு 12-13 மணி நேரம் வேலை செய்து மாதம் 11,000 ரூபாய் சம்பாதிக்கிறேன். ஆனால் டெல்லி போன்ற நகரங்களில் வசிக்க இது போதாது,” என்கிறார். “வீட்டு வாடகை, தண்ணீர், மின்சாரத்திற்கு என மொத்த செலவுகளையும் சேர்த்தால் மாதம் சுமார் ரூ.9,600 ஆகிவிடும்,” என்கிறார் நூர்.
2004-ஆம் ஆண்டு தனது அத்தை (தாய் வழி உறவு) மற்றும் கணவருடன் நூர் டெல்லி வந்தார். 21 வயதில் முதல் குழந்தைக்கு அவர் தாயானார். பீகாரின் சுலிந்தாபாத்தில் இருந்து வேலையும் நல்ல வருமானமும் தேடி தலைநகருக்கு அக்குடும்பம் புலம்பெயர்ந்தது. நூர் சிறப்பான வாழ்க்கையை விரும்பினார்.
டெல்லி-என்சிடிக்கு 1991 முதல் 2001-ஆம் ஆண்டிற்குள் அதிகம் புலம்பெயர்ந்தவர்களின் பட்டியலில் பீகார் இரண்டாம் இடத்தில் உள்ளது. காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு (2024), இந்த தரவில் எந்த மாற்றமும் இல்லை என்கிறது. வேலை தேடி மட்டுமே பீகாரிலிருந்து டெல்லிக்கு புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 11 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என்கிறது கணக்கெடுப்பு.
டெல்லி வந்தடைந்த நூர் குடும்பம், காஷ்மிரி கேட்டில் உள்ள குடிசைப்பகுதியில் தங்கியது. இளம் கர்ப்பிணியான நூர் முதன்முதலில் கட்டுமான பணியிடங்களில் வேலை செய்ய தொடங்கினார். பிறகு அவர் ஸ்வரூப் நகரில் உள்ள தொழிற்சாலைக்கு வேலைக்குச் சென்றார்.








