வயலை பண்படுத்தும் வேலையில், ஆண்கள் அதிகம் ஈடுபடுகின்றனர். இந்த வேலைகளுக்கு எப்போதும் அதிகமாகவே கூலி வழங்கப்படும். ஆனால், தற்போது இது போன்ற வேலைகளுக்கு அதிக அளவில் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
நாற்று நடுதல், களையெடுத்தல் போன்ற பாரம்பரிய வேலைகளில் 80 சதவீதத்துக்கும் அதிகமான வேலைகள் தற்போதும் பெண்களாலேயே மேற்கொள்ளப்படுகின்றன. இந்த வேலைகள், முதுகு, கால், கைகளுக்கு அதிகப் பளுவை கொடுக்கும் வேலைகள்.
போதுமணி, 3.5 ஏக்கர் நிலத்தில் தனது கணவர் சி. ஜெயபாலுடன் (விவசாயி மற்றும் நீச்சல் பயிற்சியாளர்) சேர்ந்து விவசாயப் பணிகளை செய்கிறார். இவரது கணவர் சொந்த நிலத்தில் உழைத்தது போக, மற்ற நேரங்களில் விவசாய கூலியாகவும் வேலை பார்க்கிறார். இது அவர்களின் குடும்ப வருமானத்தை சற்றே உயர்த்துகிறது. நான்கு மணி நேர உழைப்புக்கு ரூ. 100 (காலை 8 மணி முதல் 12 மணி வரை) கூலி கிடைக்கும்.
போதுமணியின் காலைப் பொழுதுகள் எப்போதும் பரபரப்பானவை. காலை 5 மணிக்கு எழுந்து, சமையல் வேலைகளை முடித்து, பள்ளிக்கூடம் செல்லும் பிள்ளைகளுக்குச் சாப்பாடு காட்டிக் கொடுக்கும் வேலைகளில் பரபரப்பாக இருப்பார். அதன் பின்னர் தொடங்கும் அவரது, விவசாய வேலைகள். சீக்கிரம் வயலுக்குச் செல்வதற்காக கம்மாயில் மார்பளவு நீரில் நடந்து செல்கிறார்.
சொந்த வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் தொடங்கி, நடவு, களைஎடுத்தல், அறுவடை என அனைத்துப் வேலைகளையும் அவரே செய்கிறார். அதோடு, வளர்க்கும் மாடு, ஆடுகளுக்கு தீவனம் வைப்பது, அவற்றைக் கவனிப்பது என்று அவரது மிச்ச நேரமும் உழைப்பிலேயே கழிகிறது. இதற்கிடையே, மறந்து போன மதிய உணவைத் தாமதமாகவும் அவசரமாகவும் சாப்பிடுகிறார். இரவில் வீட்டுக்கு வந்ததும், குடும்பத்தாருக்காகச் சமையல் செய்கிறார்.
நம்மிடம் மெல்லிய புன்னகையுடன் பேசத் தொடங்கினார் போதுமணி. அவரது உழைப்பை கணவர் அங்கீகரித்துப் பேசியபோது, அவரது புன்னகை இன்னும் மலர்ந்தது. தங்கள் குழந்தைகள், நிலத்தில் அல்ல, அலுவலகத்தில் அதிகாரிகளாக வேலை செய்ய வேண்டும் என்பதில் தம்பதியர் உறுதியாக உள்ளனர். நான் பள்ளிக்கூடம் போனதே இல்லை என்று சொன்ன போதுமணியின் கண்கள் குளமாயின. அதை மறைக்க தனது முகத்தைத் திருப்பிக் கொண்டார்.