கரீப் நகரின் காற்றில் மாசு அடர்ந்திருந்தது. கூடவே துயரமும்.
2026ம் ஆண்டின் மே 19 முதல் 23 வரை நடந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில், மும்பையின் கிழக்கு பாந்தராவின் 500 குடிசைகள் தகர்க்கப்பட்டன. இவை யாவும் தினக்கூலி மற்றும் வீட்டு வேலை செய்பவர்களின் வீடுகள்.
எங்கும் இடிபாடுகள்.
தார்ப்பாய்க்கு அடியில் அலியா ஷேக், ருக்சார் கான் அஃப்சர், அஸ்மா ஷேக் மற்றும் ஹினா கான் ஆகியோர் ஒன்றாக அமர்ந்திருந்தனர். இஸ்லாமியர் அதிகம் வசிக்கும் இப்பகுதியில் அவர்களின் வீடுகள் இருந்த பகுதிக்கு எதிரிலுள்ள நடைபாதையில் அவர்கள் இரவை கழிக்கின்றனர்.
மே 17 மாலையில், இரண்டு நாட்களில் பந்த்ரா நிலையத்தை சுற்றி இருக்கும் வசிப்பிடங்கள் அகற்றப்படும் என கரீப் நகரில் வசிப்பவர்களுக்கு நோட்டீஸ் வந்தது.
இங்கு வசிக்கும் பெரும்பாலானோர் கொண்டாடும் ஈத் விழாவுக்கு இன்னும் சில நாட்களே இருந்தன. “மனிதர்களிடம் மனிதம் எங்கே போனது?” என 52 வயது இல்லத்தரசி ஆலியா கேட்கிறார். மருமகளுக்கும் மூன்று பேரக் குழந்தைகளுக்கும் அவர் வாங்கிய புத்தாடைகளும் பிற உடைமைகளுடன் மூட்டை கட்டப்பட்டு இருந்தது.
















