கோரல் மரம் மலர்ந்திருக்கிறது. நாகாலாந்தின் மான் கிராமத்தில் நெருப்பின் நிறமொத்த பூக்கள், வசந்த கால வரவையும் வருடந்தோறும் நடத்தப்படும் ஏவோலேங் வசந்த விழா வரவையும் அறிவிக்கிறது.
62 வயது நயிலெய் கொன்யாக் பேரனுடன் வந்திருக்கிறார். கொன்யாக் மாணவர் மன்ற கட்டடத்தின் வராண்டாவில் அமர்ந்திருக்கும் அவர் புன்னகைத்து, “இங்கு வந்து எல்லா நிகழ்வுகளையும் நான் பார்க்கவிருப்பது எனக்கு உற்சாகத்தை தருகிறது,” என்கிறார். அவர் அதிகம் எதிர்பார்ப்பது விருந்து நிகழ்வைத்தான். “மிகவும் ருசியான உணவை நான் உண்பேன்,” என்கிறார் நயிலெய். “குழைந்த சாதம், கறி, சட்னி, பழங்கள்.”
கொண்டாட்டத்தில் பாடல், நடனம், பாரம்பரிய போட்டிகளும் கொங் கெய் ஹாம் அஜாக் மெக் (மூங்கில் கழி ஓட்டப்பந்தயம்), காம் துத் (மேளம் கொட்டுதல்) மற்றும் வென் கென் மெக் (நெருப்பு உருவாக்குதல்) போன்ற நிகழ்வுகளும் நடக்கும்.
கொன்யாக் பழங்குடியால் கொண்டாடப்படும் ஏவோலேங் விழா ஆறு நாட்களுக்கு நடக்கும். மார்ச் - ஏப்ரல் ஆகிய வசந்த கால மாதங்களில் நடத்தப்படும் இவ்விழாவில் புதியாக விதைகள் நட்டிருக்கும் உணவு சேகரிப்பாளர்கள், நல்ல அறுவடைக்காக கடவுளின் ஆசிர்வாதத்தை கேட்டு வருவார்கள். இப்பகுதிகளில் பிரதான பயிராக நெல் இருக்கிறது. கலவை சாகுபடிதான் இங்கு அதிகம் நடக்கிறது.
கொன்யாக்குகளுக்கு தலைமையாக பாரம்பரிய ஊர் தலைவர்கள் அல்லது அங்குகள் இருக்கின்றனர். சமீபகாலமாக தேர்ந்தெடுத்த உறுப்பினர்களை கொண்டு ஊர் சபையும் செயல்படுகிறது. அங்கின் வீட்டுக்கு அருகே உள்ள நிலத்தில்தான் ஏவோலேங் அல்லது ஒயா என உள்ளுர்வாசிகளால் அழைக்கப்படும் வருடாந்திர விழாவில் குடும்பங்கள் கூடி கொண்டாடுவர்.


