நவம்பர் மாத லேசான வெயிலில் சோமேஷ்வர் ஏக்நாத் சால்கர் தலைக்கு குளித்துவிட்டு தனது கூடாரத்திற்கு வெளியே ஈரமான முடியை வாருகிறார். இந்த ஓய்வு என்பது குறுகிய நேரம் தான்- அவரது அன்றாடம் காலை 4 மணிக்கு தொடங்கி 12-13 மணி நேரங்கள் வரை நீள்கிறது.
சோமேஷ்வரைப் போன்று நூற்றுக்கணக்கான தொழிலாளர்களும், அவர்களின் குடும்பத்தினரும் கோலாப்பூரில் உள்ள சர்க்கரை ஆலைகளில் வேலை தேடி வந்து கரும்பு வெட்டுகின்றனர். கோலாப்பூர் மாவட்டம் பர்கான் படோலியில் உள்ள வர்ணா சர்க்கரை ஆலையில் அனைத்து குடும்பங்களும் கொட்டகை அமைத்து அடுத்த நான்கு முதல் ஐந்து மாதங்களுக்கு தங்கி கரும்பு வெட்ட உள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் மராத்வாடாவின் பீட் போன்ற வறட்சி பாதித்த பகுதிகளில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள். சோமேஷ்வர் பாவ் பீட் மாவட்டம் முங்கியிலிருந்து குடும்பத்துடன் வந்துள்ளார். கரும்பு பயிர்கள் அதிகம் செறிவுடன் காணப்படும் கோலாப்பூர் மாவட்டத்தை அடைவதற்கு அவர்கள் 650 கிலோமீட்டர் தூரத்தை மூன்று நாட்கள் பயணித்து வந்துள்ளனர்.
”மனைவி பரிமளா, எங்கள் மூன்று மகன்கள் பிரமோத், வினோத், தசரத் ஆகியோரும் என்னுடன் வந்துள்ளனர்,” என்கிறார் அவர். டிராக்டர் டிராலியில் அவர்கள் தங்கள் உடைமைகளுடன் பயணித்து வந்துள்ளனர். கொட்டகைக்குள் தானிய மூட்டைகள், எரிவாயு உருளை ஆகியவை உள்ளன.
























