ஒரு காலத்தில் மேற்கு வங்கம், பிகார் மற்றும் அஸ்ஸாம் போன்ற இடங்களில் அதிகமாக இருந்த கால்வாய்கள் மற்றும் சதுப்பு நிலங்கள் ஆகியவற்றில் வளர்ந்து அனேஷ்வரி போன்றவர்களால் சேகரிக்கப்பட்ட ஷோலா செடிகள் இப்போது பைஷாக் மற்றும் ஜ்யாய்ஸ்தா (ஏப்ரல் பாதி முதல் ஜூன் பாதி வரை) மாதங்களில் விளைவிக்கப்படுகிறது. அனேஷ்வரி தன் வீட்டுக்கு பின் விளைந்திருக்கும் ஷோலா செடியை காட்டுகிறார். “தொடக்கத்தில் இக்கலையை நான் கற்றபோது, இச்செடிகளை செலவின்றி எடுத்து வந்தோம். வாய்க்கால்கள்தோறும் வளர்ந்து கிடந்தன.”
அனேஷ்வரி தொடர்ந்து ஈரநிலங்களும் சதுப்புநிலங்களும் காலநிலை மாற்றத்தால் எப்படி குறைந்து வருகின்றன என சொல்கிறார்: “இப்போதெல்லாம் இந்த செடிகள் அரிதாகிவிட்டன. அவை வளர்ந்தாலும் நமக்கு இலவசமாக கிடைப்பதில்லை. ஒவ்வொன்றையும் (கிளையையும்) எட்டு அல்லது ஒன்பது ரூபாய்க்கு வாங்க வேண்டியிருக்கிறது.” ஷோலா செடிகள் அதிகமாக கிடைத்துக் கொண்டிருந்ததை இது பாதித்திருப்பதாக அவர் புலம்புகிறார்.
ஷோலா மாலைகள் மற்றும் திருமண தலைப்பாகைகள் போன்றவை முன்பு வங்க மணவிழாக்களிலும் அன்னப்பிரசன்ன விழாக்களிலும் வழக்கமாக இருந்தன. விலை மலிவான தெர்மாக்கோல் வகைகள் அவற்றுக்கு பதிலாக பயன்படுத்தப்படும் வழக்கம் அதிகமாகி வருகிறது. டாகர் சாஜ் (பின்னணி மற்றும் நகைக்கடை அலங்காரமாக பயன்படுத்தப்படும் சிலை அலங்காரங்கள்) போன்றவையிலும் இதுதான் நிலை. தேவை குறைந்துவிட்டதால், சில விவசாயிகள்தான் தற்போது ஷோலாவை விளைவிக்கின்றனர்.
ஒரு பக்கம் கலை அழிவு மறுபக்கம் விளைவிப்பதில் சரிவு என இக்கலை ஓர் ஆபத்தான சுழற்சியில் சிக்கி இருக்கிறது. நாட்டின் அதிக எண்ணிக்கையிலான கலைஞர்கள்கள் மேற்கு வங்கத்தில் இருக்கிறார்கள் என்றபோதிலும், யுனேஸ்கோவுடன் மாநில அரசின் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் மற்றும் ஜவுளித்துறை இணைந்து முன்னெடுத்த கிராமப்புற கலை மற்றும் பண்பாட்டு மைய முன்னெடுப்பில் ஷோலா கலைஞர்கள் பற்றிய தரவு இடம்பெறவில்லை. 1995ம் ஆண்டின் இந்திய தாவரவியல் கணக்கெடுப்பு அறிக்கை, 10,000 கலைஞர்கள் மேற்கு வங்கத்தில் இருப்பதாக குறிப்பிடுகிறது. ஆனாலும் வடக்கு வங்க விவசாயிகள் மற்றும் கலைஞர்கள் பற்றிய குறிப்பீடுகள் இல்லை.
தற்போது கையளவு விவசாயிகள் மட்டும்தான் கொச் பிகாரின் துவாங்குஞ்ச் துணைடிவிஷனில் உள்ள ரசிக்பில், நகுர்ஹர் மற்றும் சல்பாரி கிராமங்களில் ஷோலா விளைவிக்கின்றனர். ஆஷார் (ஜூன் பாதி முதல் ஜூலை பாதி வரை) மாதத்தில், ஷோலா விவசாய நிலங்களுக்கு கலைஞர்கள் செல்கின்றனர். பெரும் விவாதம் மற்றும் பேரம் ஆகியவற்றுக்கு பிறகு அவர்கள் ஆர்டர்கள் கொடுக்கின்றனர். ஒரு செடிக்கு இன்ன விலை என்றோ மொத்த நிலத்தின் பயிருக்கு விலை என்றோ அவர்கள் வாங்குகின்றனர்.
“கடந்த வருடம், ஒரு நிலத்தில் விளைந்த எல்லா செடிகளையும் வாங்கினோம்,” என்கிறார் அனேஷ்வரி. “ஆறு பேர் ஒன்பது கதா (0.28 ஏக்கர்) நில செடிகளை 25,000 ரூபாய்க்கு வாங்கினோம். தொழிலாளர்கள் மற்றும் போக்குவரத்து செலவு இல்லாமல் இந்த தொகை.” விவசாயிகள் விளைவிப்பதில்லை. ஆண் ஷோலா கலைஞர்கள் அறுவடை செய்து, பயிரை எடுத்து வருகிறார்கள். 2,000 ரூபாய் வரை போக்குவரத்துக்கும் தொழிலாளர்களுக்கும் செலவாகிறது.