மலைகளுக்கு மேல் இருக்கும் வாகி கிராமத்தை சேர்ந்த பல்பீர் ஜூலை 2025-ல், ஊரின் மூத்தவர்கள் அழைத்ததால் கோடி கிராமத்துக்கு வந்தார். நுட்பமான முகங்கள் மற்றும் தோற்றங்களை தேவதாரு மரத்தில் செதுக்குவது குடும்ப பாரம்பரியம் என்கிறார் பல்பீர்: “எங்களின் குடும்பத்தில் இருந்து ஒரு குழந்தை இந்த வேலையை செய்ய வேண்டும். வெளியே வேலை கிடைத்தாலும் திரும்ப வந்து இந்த வேலை செய்ய வேண்டும்.”
செதுக்குவதை தாண்டிய திறன் இந்த தொழிலுக்கு தேவை. “இந்த வேலை செய்பவருக்கு கல்வி அறிவு இருக்க வேண்டும்,” என்கிறார். “அளப்பதற்கும், வெட்டுவதற்கும் இன்ன பிற விஷயங்களுக்கும் அவருக்கு கணிதம் தெரிந்திருக்க வேண்டும்.”
வாகியில் நக்காஷி (மரக் கைவினை மற்றும் செதுக்கும்) தொழிலை செய்யும் ஆறு குடும்பங்களில் ஒரு குடும்பத்தை சேர்ந்தவர் பல்பீர். மூன்று கைவினைஞர்கள் அவருடன் இங்கு வந்திருக்கின்றனர். அவர்கள் அனைவரும் பட்டியல் பழங்குடி சமூகமான ஜான்சரி சமூகத்தை சேர்ந்தவர்கள்.
இன்று இந்த நக்காஷி குழு தூண்களில் இலைகள் மற்றும் வடிவங்களை செதுக்கும் பணியில் இருக்கின்றனர். ஊர் மக்கள் ஒப்புக் கொண்ட வடிவங்களின் அடிப்படையில் இதை அவர்கள் செய்கின்றனர். இப்பகுதியில் கோவில்கள் அனைவருக்குமான கட்டுமானங்களாக பாவிக்கப்படுகின்றன. “அவை மொத்த ஊருக்கும் சொந்தமானவை,” என்கிறார் சுனில் சிங் தொமார். “சில இடங்களில் பல ஊர்கள் இணைந்து பெரிய கோவிலை கட்டுகின்றன,” என்கிறார் அவர். கோடியில் வசிக்கும் தொமார் பெசோகிலானி அரசு பள்ளியில் பரிசோதனைக் கூட உதவியாளராக இருக்கிறார்.
அனைவருக்குமானது என சொல்லப்பட்டாலும் கோவில்களில் பாலினம் மற்றும் சாதி ரீதியிலான பாரபட்சங்கள் இருக்கின்றன. பெண்கள் இந்த கோவில்களில் நுழைய முடியாது. இது குறித்த கருத்தை தெரிந்து கொள்ள ஊர் பெண்கள் பலரை அணுகியபோது அவர்கள் பதில் சொல்ல விரும்பவில்லை. கடவுளின் சாபத்துக்கு ஆளாக விரும்பவில்லை என்றார்கள். “குறிப்பிட்ட சில காரணங்களால் பெண்கள் கோவில்களுக்குள் நுழைய முடியாது,” என்று மட்டும்தான் உதேலிலுள்ள உணவகத்தின் உரிமையாளரான 42 வயது ஆஷா தேவி கூறினார். ஒடுக்கப்பட்ட சாதியினரோ கெட்டது நடந்து விடும் என்கிற பயத்தால் கோவிலுக்குள் நுழையாமல் இருப்பதாக சொல்கின்றனர்.