”இடம்பெயர நாங்கள் தயாரில்லை. எங்கு செல்வோம்? வீடு இல்லாதவர்களாக நாங்கள் சுற்றி அலைய வேண்டியிருக்கிறது,” என்கிறார் முன்னாலால் குர்மி. இந்தியாவின் 54வது புலிகள் காப்பகமான வீராங்கனா துர்காவதி (VDTR) காப்பகத்தால் விழுங்கப்படவிருக்கும் 93 கிராமங்களில் ஒன்றான சர்சேல ரிட் என்கிற கிராமத்தை சேர்ந்த விவசாயி அவர். மத்தியப் பிரதேசத்தின் டமோ மாவட்டத்தை சேர்ந்த கிராமம் அது. புது பரிமாணம்: இங்கு சிறுத்தைப் புலிகளும் வந்து சேரவிருக்கின்றன.
புலிகள் காப்பகங்களாக இருக்கும் 58-ல் இரண்டு காப்பகங்களில் சிறுத்தைப் புலிகளும் சேர்ந்து வசிக்கின்றன. இந்த காப்பகங்கள் வன உயிர்களுக்கு மட்டுமானது. யாரும் அத்துமீற முடியாது.
இந்தியாவின் காடுகளின் 10 சதவிகிதமான 80,000 சதுர கிலோமீட்டர் நிறைந்திருக்கும் காப்பகங்களை உருவாக்க, 257 கிராமங்கள் இடம்பெயர்த்தப்பட்டிருக்கின்றன என பழங்குடி விவகாரங்களுக்கான இணை அமைச்சரான துர்காதாஸ் உய்க்கி, டிசம்பர் 2025-ல் மக்களவையில் கூறினார். காப்பகங்களுக்குள் அமைந்திருக்கும் 730 கிராமங்கள் அடுத்தபடியாக இடம்பெயர்த்தப்படவிருக்கின்றன.
தமோவில் இருக்கும் இன்னொரு கிராமமான தபாவும், புது காப்பகத்தால் விழுங்கப்படும். “நாங்கள் எங்கே வாழ்வோம்? என்ன சாப்பிடுவோம்?” எனக் கேட்கிறார் நெளரதேகி காப்பகத்தின் விளிம்பில் இருக்கும் கிராமத்தில் வாழும் ராதா ராணி கோண்ட். முற்றத்தில் குளிர்கால வெயிலில் அமர்ந்திருக்கும் அவர், தன் கைகளை கோதுமை விளைச்சலில் அளாவியபடி பேசினாலும் 75 வயதாகும் அவர் கவலையுடன் இருப்பது தெரிகிறது.
காப்பகங்களுக்கான அடிப்படை ‘வன உயிர்களுக்கான கோட்டை’ என்பதுதான். வன உயிர்களுக்கென தனியாக பாதுகாப்பு பகுதிகள்தான் அவை. புலிகளும் மக்களும் ஒரே இடத்தில் வசிக்க முடியாது என்கிற கூற்றில் பெரிய உண்மை இல்லை என்கின்றனர் உயிரியலாளர்கள். உண்மை: இந்தியாவின் காடுகளில் வசிக்கும் பழங்குடி சமூகங்கள் வன விலங்குகளுடன் நெருக்கமாகவே வாழ்ந்து வந்திருக்கின்றனர். ”காடையும் விலங்குகளையும் பராமரிப்பவர்கள் நாங்கள்தான். அவர்கள் எங்களை வெளியேற்றுகிறார்கள். இங்கு அவர்கள் ஒரு சுற்றுலா விடுதியை கட்டுவார்கள்,” என்கிறார் ஜன்கா பாய். அவரின் கிராமமான உம்ரவான், பன்னா புலிகள் காப்பக விரிவாக்கத்தால் 2015ம் ஆண்டில் விழுங்கப்பட்டுவிட்டது.























