”அக்டோபர் 29 அன்று கால்சிங், பிலால்களான தங்களுக்கென பூமி தான இயக்கத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட 33 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்ததாக ஊரின் பஞ்சாராக்கள் மீது புகாரளித்தார். குடிசைகளை போட்டு ஆக்கிரமிக்கத் தொடங்கினர். புகாரால் கோபமடைந்த பஞ்சாராக்கள் இரண்டு நாட்கள் கழித்து கால்சிங்கை கொடூரமாக தாக்கினர். கடுமையாக காயம்பட்ட அவர், இந்தூரின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஒரு மாதம் கழித்து அங்கு அவர் இறந்தார். பல முறை நிர்வாகத்தில் நாங்கள் புகார் செய்தபோதும் அதிகாரம் மிக்கவர்களின் செல்வாக்கு மற்றும் அரசியல் அழுத்தம் ஆகியவற்றால் ஏதும் நடக்கவில்லை.” 2024ம் ஆண்டு இரு தரப்புக்கும் சொந்தமில்லா ஒரு நிலத்துக்காக இரண்டு தரப்புகள் மோதிக் கொண்ட வன்முறையான சம்பவத்தை நினைவுகூருகிறார் கல்லு பிலாலா. அச்சம்பவத்தில் அவரும் காயமுற்றார்.
கால்சிங்கின் மறைவுக்கு பிறகு, பிலாலா பழங்குடிகளுக்கும் பஞ்சாரா சமூகத்தினருக்கும் இடையே வன்முறை வெடித்தது. விளைவாக 10 பஞ்சாரா வீடுகள் தீ வைக்கப்பட்டன. இரு சமூகத்தினரில் பலர் வீடுகளை இழந்தனர். எண்ணற்றோர் அச்சத்தில் ஊரை விட்டு தப்பினர். திறந்த வெளியில் குளிர் இரவுகளை கழிக்கும் கட்டாயத்தை எட்டினர்.
”எங்களின் முன்னோருக்கு பூமி தான பட்டாக்கள் கொடுக்கப்பட்டன,” என்றார் 46 வயது கால்சிங் பிலாலா 2024ம் ஆண்டு தொடக்கத்தில் நம்மை சந்தித்தபோது. 50-55 வருடங்களுக்கு முன் அவர்கள் இங்கு வந்து சேர்ந்தனர். இன்று அந்த பட்டாக்கள் நில உரிமை பட்டாக்கள் என குறிப்பிடப்படுகின்றன. ஆனால் பல வருடங்கள் ஆகியும் நிலத்தின் உண்மையான உரிமையை பெறாமல் விட்டுவிட்டோம் நாங்கள். பில், பிலாலா மற்றும் சகாரியா பழங்குடிகளின் பெரும் பிரச்சினையாக இது இருக்கிறது. பமோரி தாலுகாவில் இருக்கும் பல ஆதிவாசிகளின் விவசாய நிலங்கள் ஆதிக்க சாதி பண்ணையார்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றன.”
“பல பூமிதான பட்டாக்கள் கிராம நில அளவை எண்ணில் வருகிறது,” என அவர் விளக்கினார். “அவற்றை மற்றவர்கள் ஆக்கிரமித்தனர். பத்வாரி, தாசில்தார் என எவரும் எங்களுக்கு இந்த நிலத்தை வழங்க முடியவில்லை.” வருவாய் துறை அதிகாரிகள் இந்த வேலையை செய்யாததால், சமூகங்கள் தொடர்ந்து மோதலில் இருக்கின்றன. இத்தகைய மோதல் ஒன்றில் உயிர் பறிபோவதற்கு பல மாதங்களுக்கு முன்பே கால்சிங் இதை சொன்னார்.
இந்த மோதல்களின் பெரிய பிரச்சினை அது கொண்டிருக்கும் நுட்பம், கொதிநிலை, பல மட்ட சிக்கல்கள் ஆகியவைதாம். இவை பழங்குடியினரை பிற பழங்குடியினருடனும் வசதியற்ற பிற்படுத்தப்பட்ட மக்களுடனும் ஆதிக்க சாதி நிலவுடமையாளர்களுடனும் வனத்துறை அதிகாரிகளுடனும் அரசியல்வாதிகளுடனும் மோத வைத்திருக்கிறது.
இச்செய்தியாளர் ஆவணப் பணியை தொடங்கிய 2022ம் ஆண்டு முதல் பழங்குடி நிலத்தை சுற்றி இருக்கும் பல மோதல்களை பார்த்திருக்கிறார். மத்தியப்பிரதேசத்தின் குனாவிலுள்ள தனோரியா கிராமத்தின் ராம்பியாரி, அந்த வருடத்தில் ஆதிக்க சாதி நிலவுடமையாளர்களால் சொந்த நிலத்திலேயே உயிருடன் எரிக்கப்பட்டார். அதுவும் நிலவுரிமைக்கான 20 வருட கால சட்டப் போராட்டத்தில் அவர் வென்ற பிறகு நடந்தது. நிலவுரிமை சார்ந்து நிகழ்த்தப்படும் வன்முறை சம்பங்கள் அவரின் மரணத்துக்கு முன்பிருந்தே இருக்கிறது. இன்றும் அதிகமாக இருக்கிறது.















