“அக்கா இங்கு நிஜமாகவே நம் சொந்த மொழியில் படிக்கலாமா?” என்றபடி தனது கைகளில் குருக் நூலை பிடித்தபடி 15 வயது சிறுவன் அன்ஷ் ஒராவோன் என்னிடம் கேட்கிறான்.
மேற்குவங்கத்தின் ஜல்பைகுரி மாவட்ட தேயிலை தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் நாம் இருக்கிறோம். அன்ஷின் பெற்றோரும், என் பெற்றோரும் வேலை செய்யும் தோட்டம் லீஷ் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.
இங்குள்ள பெரும்பாலான தொழிலாளர்களைப் போன்று எங்கள் குடும்பமும் ஒராவோன் பழங்குடியைச் சேர்ந்தவர்கள். எங்கள் முன்னோர்கள் இப்போதைய ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி, கும்லா, சிம்திகா மாவட்டங்களை கொண்ட சோட்டாநாக்பூர் பீடபூமி பகுதியிலிருந்து நான்கு தலைமுறைகளுக்கு முன் வந்தவர்கள். நாங்கள் வீட்டில் எங்கள் சமூக மொழியான குறுக் தான் பேசுவோம், வெளியில் மட்டும் இந்தி, வங்காளம் பேசுவோம். எங்கள் தாய்மொழியில் அன்ஷ் ஒருபோதும் புத்தகத்தை கண்டிருக்க மாட்டான்.
லீஷ் ஆற்றங்கரையோர தேயிலை தோட்டத்திற்குள் உள்ள பட்டிபாரியில்தான் நான் வளர்ந்தேன். மக்கள்தொகை கணக்கெடுப்பு கையேட்டில் லிஷ் ஆறு என்று குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் கிராமத்தினரும், உள்ளூர் நிர்வாகமும் லீஷ் ஆறு என்றே குறிப்பிடுகின்றனர்.



















