“இரவில் மேகவெடிப்பு வந்து அனைத்தையும் அடித்துச் சென்றுள்ளதை நீங்களே பாருங்கள். எல்லாவற்றையும் அடித்துச் சென்றுவிட்டது. எங்கள் வீட்டையும், நான்கு கால்நடைகளையும் இழந்துவிட்டோம். எல்லாம் போய்விட்டது…” என்று கூறியபடி ஸ்ரீகவால் பாரத் மோரே, தனது தகர வீட்டை நம்மிடம் காட்டுகிறார். “எங்கள் இடுப்பளவுக்கு வெள்ளம் வந்துவிட்டது. எங்கள் மகன் விழித்துக் கொண்டு எங்களை எழுப்பியதால் நாங்கள் உயிர்பிழைத்தோம். ஆனால் இந்த தண்ணீர்,” என்கிறார்.
வீட்டில் காப்பாற்ற முடிந்தவற்றை மாஷி தகரத்தாலான பரண் மீது அடுக்கினார். வீட்டின் மண் தரை வெள்ளத்தில் அரிக்கப்பட்டு மேடு பள்ளமானது.
தாராஷிவின் (முன்பு உஸ்மானாபாத்) பூம் வட்டாரத்தில் உள்ள சிஞ்ச்பூர் தகேவில் 2025, செப்டம்பர் 21ஆம் தேதி பலத்த மழை பெய்தது. கோதாவரியின் கிளை ஆறான பான்கங்காவின் கரையில் இக்கிராமம் அமைந்துள்ளது. அடுத்த நாளான செப்டம்பர் 22ஆம் தேதியும் இரவு முழுவதும் கடும் மழை பெய்தது. கிராமமே வெள்ளத்தில் மூழ்கியது. “எங்கள் வாழ்நாளில் இப்படி ஒன்றை நான் கண்டதில்லை,” என்று இப்பேரிடரை மக்கள் விவரிக்கின்றனர்.
கரையோரம் உள்ள தனது இரண்டு ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்ட இரண்டு திராட்சை தோட்டங்கள் உட்பட பயிர்களை வெள்ளம் அடித்துச் சென்றுள்ளதை சூர்யகாந்த் மோரே நம்மிடம் காண்பிக்கிறார். எங்கள் கால்நடைகளை கழுத்தளவு வெள்ளம் சூழ்ந்திருந்தது. கால்நடைகளை திறந்துவிட்டதால் அவை உயிர்பிழைத்தன,“ என்கிறார் மோரே. “தகர கொட்டகையில் சேமித்து வைத்திருந்த அனைத்தும் மூழ்கிவிட்டன. சோளம், பாசிப்பயறு, உளுந்து, கடலை இருந்த சாக்கு மூட்டைகள் என அனைத்தும் மூழ்கின. தீவனமாக வைத்திருந்த மக்காச்சோள கதிர்களும் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.“
ஒன்றரை ஏக்கர் நிலத்தில் மோரே வெங்காயம் பயிரிட்டு இருந்தார். வயல் முழுவதும் கற்களும், பாறைகளும் மட்டுமே இப்போது மிஞ்சியுள்ளன. வெங்காய செடிகளுடன் வளமான மேல் மண்ணையும் வெள்ளம் அடித்துச் சென்றுவிட்டது.























