கோபால்நகரில் உள்ள ஒரு சிறிய சந்தால் வீட்டின் மண் சுவர்களில் ஒரு காடு வளர்கிறது. கூரை வழியாக உயரும் மரங்கள் அதன் அருகில் வளரும் வேப்ப மரத்தின் கிளைகளுடன் இணைகின்றன. ஒரு ஆண் புள்ளிமான் அதன் குட்டியுடன் நடந்து செல்லும் அந்த பாதையில், சிறிய பூக்கள் மற்றும் பெரிய பட்டாம்பூச்சிகள் வரிசை கட்டி நிற்கின்றன. புல்புல்கள், பாப்லர்கள், பார்பெட்டுகள் மற்றும் பாரகீட்களின் பிரம்மாண்ட உருவங்கள், அலங்கரிக்கப்பட்ட அவற்றின் வண்ண இறக்கைகளால் அவ்விடத்தை நிரப்புகின்றன. அருகிலுள்ள இல்லம்பசார் காட்டை சார்ந்த இப்பறவைகள், சந்தால் சுவரின் மங்கிய வெள்ளை நிறத்திற்கு முன் படபடக்கின்றன.
சுவரில் இந்த பறவைகளின் சலசலப்போ அல்லது அதன் மாயையோ, அல்லது தகர கூரையில் மே மாத மதியம் பெய்யும் பருவகாலமற்ற மழையின் இசையோ, 75 வயதான சுர்கி துடுவின் கவனத்தை சிதறடிக்கவில்லை. ஆனால் வீட்டின் வெளிச்சுவர் ஓவியத்தின் அருகே நடந்து செல்லும்போது எங்கள் காலடிச் சத்தம், களிமண்ணில் காந்தா போல ஒலித்து சிதறடிக்கிறது.
இலம்பசார் தொகுதியில் உள்ள இந்த கிராமத்தின் குறுக்கே செல்லும் இந்த சாலையின் இருபுறமும் இதுபோன்ற பல சந்தால் மண் குடிசைகள் நெருக்கமாக அமைந்துள்ளன. வீடுகளின் வெளிச்சுவர்களில் உள்ள வண்ணமயமான சுவரோவியங்கள், கடந்து செல்லும்போது நம் கவனத்தை ஈர்க்கின்றன.
“இப்போதெல்லாம் குழந்தைகள், தொலைபேசிகள் மற்றும் செய்தித்தாள்களைப் பார்த்து புதிய வடிவங்களை வரைகிறார்கள். நம் காலத்தில் அந்த வசதி எங்கே இருந்தது? வயலில் இருந்து சிறிது சேற்றை எடுத்து சுவர்களில் வண்ணங்களைப் பூசுவோம்,” என்று சுர்கி துடு தனது அறையிலிருந்து வெளியேறி தனது வீட்டின் வாசலுக்கு வரும்போது கூறுகிறார். அவருடைய குரலின் எளிமை, அலங்கரிக்கப்பட்ட சுவர்களைப் புகைப்படம் எடுக்க கிராமத்திற்கு அடிக்கடி வரும் ஆர்வமுள்ள பார்வையாளர்களுடன் பேசி பழகியிருப்பதை குறிக்கிறது.
எங்கள் கேள்விகளுக்காக காத்திருக்காமல், எங்கள் ஆர்வத்தை கணித்து விஷயத்திற்குள் நேரடியாகச் செல்கிறார். “சமையல் பாத்திரத்திலிருந்து எடுக்கப்பட்ட எரிந்த எண்ணெய்யான ஹ்னரிர் தேலின் மிச்சத்தில் இருந்து செய்யப்பட்ட வெள்ளை, சிவப்பு, மற்றும் கருப்புச்சேறு [நிறம்] தான் வண்ணங்கள்.” சற்று நிறுத்திவிட்டு, மீண்டும் தொடர்கிறார்: “முதலில் பழைய களிமண் சுவரிலிருந்து பூசப்படுகிறது. பின்னர் புதிய சேறு இரண்டு முறை பூசப்படும். இறுதியாக, கரிமதி [சுண்ணாம்பு] கொண்டு ஓரங்களுக்கு வண்ணம் தீட்டுவோம்.”
புர்பா பர்தாமனின் அகுலியா கிராமத்திலுள்ள தனது பிறந்த வீட்டில், தனது குழந்தைப் பருவ நாட்களைப் சுர்கி நினைவுகூருகிறார். ஆனால் வேகமாக மாறிவரும் சந்தால் சமூகத்தின் வழிகளையும், புதிய தலைமுறையின் ஆக்கப்பூர்வமான மாற்றங்களையும் அவர் அறிந்திருக்கிறார். அவர் தற்போது கோபால்நகரில், தனது மகளுடன் வசித்து வருகிறார். போல்பூரிலிருந்து இலம்பஜார் காட்டிற்குச் செல்லும் வழியில், ஸ்ரீநிகேதன் சாலையின் இடதுபுறம் அமைந்துள்ள கிராமத்தின் 304 வீடுகளில் அவரின் வீடும் ஒன்று.


















